நானும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்று வந்தேன் என்று எப்படி ஆரம்பிப்பது. அதனால்தான் Welcome என்பதை "Selamat Datang" என்று மலாய் மொழியில் தலைப்பு கொடுத்தேன்.
பணி நிமித்தமாக சென்றதால் ஊரைச் சுற்றி பார்க்க முடியவில்லை. ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் flavour-ஐ அறிந்து கொண்டு வந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் மும்பை, டெல்லி செல்வது போல் சில நாட்கள் மட்டும் சென்றதால் எனக்கு வெளிநாடு செல்லும் உணர்வு தோன்றவில்லை. ஆனால் விமான நிலையத்தில் மனைவி குழந்தைகள் பெற்றோர் மற்றும் பல சொந்தங்களையும் விட்டு விட்டு திரும்பி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாமல் செல்லும் பலரின் கண்களின் ஈரம் மனதை கொஞ்சம் பிசைந்தது.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சொன்ன தமிழனும் "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று சொன்ன தமிழனும் வறுமைக்கு பயந்து மட்டும் வெளிநாடு சென்று இருப்பார்கள் என்று தோன்றவில்லை. தன்னுடைய வளமையைப் பெருக்கிக் கொள்ளத்தான் பெரும்பாலும் சென்றிருக்க வேண்டும்.
நம்முடைய தமிழ்ச் சமூகம் உலகில் பெரும்பாலான நாடுகளில் வேருன்றி இருப்பது மகிழ்ச்சியான விசயமாக இருந்தாலும், பெரும்பாலும் மற்றவர்களுக்கு வேலை செய்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. நாம் மற்றவர்களிடம் வேலை தேடாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் சமூகமாக மாறினால் நம்முடைய வளமை இன்னும் அதிகமாக பெருகும்.
ஆனால் நம்ம ஆட்கள் எங்க போனாலும் நம்ம brand ஐ குத்தி விடுகிறார்கள். பொதுவாக எந்த நாட்டுக்கு சென்றாலும் நம்ம ஊர் முருகனுக்கோ, அம்மனக்கோ அல்லது பெருமாளுக்கோ கோவில் கட்டி விடுவார்கள். இது நல்ல விசயம்தான் (அல்லது தவறான விஷயம் அல்ல). ஆனால் இப்போது சிங்கப்பூரில் "டாஸ்மாக்" கையும் ஆரம்பித்துவிட்டார்கள். இதுதான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
இருந்தாலும் நம்ம ஊரை விட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழை அதிகம் வளர்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்பதை போல.
சிங்கப்பூரில் தற்போது வசிக்கும் திரு மா. அன்பழகன் அவர்கள் சீரிய முயற்சியால் தமிழ் அன்பர்கள் பலர் கூடி தமிழை வளர்க்க பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். நான் சென்ற நாளும் அப்படி ஒரு விழா நடந்து கொண்டு இருந்தது. அதில் நான் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சிங்கப்பூர் மலேசியாவைப் பற்றி நல்லதாக நாலு விசயங்களைச் சொன்னால் "நீயும் ஆரம்பிச்சிட்டியா வெளிநாட்டு புராணம்" என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுந்துவிடும்.
அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
பார்க்கப் பார்க்க ஆனந்தம் பறவை போல உல்லாசம்
வேலை இன்றி யாருமில்லை எங்கும் சந்தோஷம்
வெறும்பேச்சு வெட்டிக்கூட்டம் ஏதுமில்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் இன்றி கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்
வாழும் சிங்கப்பூர்
சிட்டுப்போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளித் துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம்
தினம் தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல
அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்
மஞ்சள் மேனிப்பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட
நடைபார்த்து மயிலாடும் மொழிகேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்
சொர்க்கம்போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர்.
Terima Kasih (நன்றி)
No comments:
Post a Comment