Saturday, October 18, 2014

பரம பதம்


முன்பெல்லாம் ஏகாதசி இரவில் பரம பதம் விளையாடுவார்கள் (முன்பெல்லாம் என்று ஏன் சொன்னேன் என்றால் இப்போது நிறைய பேருக்கு 'ஏகாதசி' என்றால் என்ன 'பரம பதம்' என்றால் என்ன என்று முதலில் விளக்க வேண்டும் பிறகுதான் விளையாடுவதைப் பற்றி யோசிக்க வேண்டும்).

பரம பத விளையாட்டை நம் வாழ்வின் அங்கமாக வைத்த நம் முன்னோர்கள் வாழ்வின் உண்மை உணர்ந்தவர்கள்.  தாயக்  கட்டையை  உருட்டுவது  நாமாக இருந்தாலும்  எப்போது ஏணி நம்மை ஏற்றி விடும் எப்போது பாம்பு நம்மை கீழே  இறக்கி விடும் என்று தெரியாது.

இந்த உண்மை புரியாமல் ஏணியில் ஏறும் போது "என்னால் என்னால்" என்று மார் தட்டிகொள்கிறோம், இறங்கும்போது "உன்னால் உன்னால்" என்று ஊரையே குறை சொல்கிறோம்.  நம் வாழ்வில் உயர்வதற்கு நாம் மட்டுமே காரணமாக இருந்தால், அந்த logic படி இறங்கும்போதும் நாம் மட்டுமேதானே காரணமாக இருக்க வேண்டும்.

சீன ஞானி Lao Tzu (இவரை லாட்சு என்றும் சொல்வார்கள் லாசு என்றும் சொல்வார்கள்.  நான் லாசு என்று சொல்லி அதை நீங்கள் லூசு என்று படித்து - எதற்கு அந்த ஞானி பெயரைக் கெடுக்க வேண்டும்.   அதனால் லாட்சு என்றே குறிப்பிடலாம்).

லாட்சு சொல்கிறார் - வாழ்வில் மறைந்து  கிடக்கும் உண்மைகள்தாம் நம்மை வழி நடத்துகின்றன என்று (இவருடைய இதே கருத்தை James  Allen  போன்ற தத்துவ ஞானிகளும் வழி மொழிந்திருக்கிறார்கள்).  அது என்ன மறைந்து கிடக்கும் உண்மைகள். வேறொன்றுமில்லை  நம்முடைய எண்ணங்கள்தான்.

மக்கள் நம்முடைய சொல்லையும், செயல்களையும்,  வைத்து நம்மை மதிப்பீடு செய்கிறார்கள்.  ஆனால்  இறைவன் (இறைவன் என்ற வார்த்தை பிடிக்காதவர்கள் இயற்கை என்று எடுத்துக் கொள்ளலாம்) நம்முடைய எண்ணங்களை வைத்து மட்டுமே நம்மை மதிப்பீடு செய்கிறான்.

இப்போதுதான் புரிந்தது தாயத்தை உருட்டுவது நாமாக இருந்தாலும் (அது செயல் மட்டும்தான்) ஏணியா அல்லது பாம்பா என்பதை நம் எண்ணத்தை வைத்து  இறைவன் முடிவு செய்கிறான்.

சரி இப்ப என்ன இந்த சிந்தனை என்கிறிர்களா ? எல்லாம் அம்மாவுக்கு bail கிடைத்த சந்தோசம்தான்.


No comments:

Post a Comment