Tuesday, March 31, 2015

இன்ஸ்பெக்டர் சரவணன் பேசறேன்


2009 ம் ஆண்டு என் குடும்பத்துடன் மூணாறு சென்றிருந்த போது அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்து வந்த குரலில் சற்றுக்  கடுமை தெரிந்தது - "நான் Crime Branch இன்ஸ்பெக்டர் பேசறேன்.  நீங்கள் சென்னை வந்ததும் என்னை வந்து பார்க்கவும். உங்களிடம் enquiry செய்ய வேண்டியுள்ளது".  நான் கொஞ்சம் jerk ஆனேன்.  ஆனாலும் Crime Branch இன்ஸ்பெக்டர் நம்மை enquiry செய்யும் அளவுக்கு பெரிய மனிதன் ஆகவில்லையே.  யாரோ நண்பர்கள் கலாய்க்கிறார்கள் என்று தோன்றியது.

மறுமுனையில் தொடர்ந்த பேச்சு அதனை உறுதி செய்தது.  "என்னடா பயந்துட்டியா ? நான்தான் உன் காலேஜ் friend சரவணன் பேசறேன். எப்படிடா இருக்க ? என்றது அந்தக் குரல்.

என் நினைவலைகள் 1990 ம் ஆண்டுக்கு பின்னோக்கி ஓடியது.  நானும் சரவணனும் B.Com, M.Com என 5 வருடங்கள் ஒன்றாக  படித்தவர்கள்.  என்னுடைய கல்லூரி நண்பர்களில் முக்கியமானவன் சரவணன்.  அப்போது அவன் வீடு திருவான்மியூர் வால்மீகி நகரில் இருந்தது.  அதனால் பெரும்பாலான நாட்களில் திருவான்மியூர் கடற்கரையில் கடலை போட்டுக் கொண்டிருப்போம்.  எங்கள் நட்பின் பிணைப்பு அதிகமாகியது அந்த நாட்களில்தான். அப்போதே காவல்துறையில் அதிகாரம் மிக்க பதவியில் வரவேண்டும் என்பது அவனது இலட்சியமாக இருந்தது.  கல்லூரி வாழ்க்கை முடிந்த சில மாதங்களில் எங்கள் பயணம் வேறுவேறு பாதைகளில் செல்ல ஆரம்பித்து விட்டது.  அவன் சப்-இன்ஸ்பெக்டர் ஆகி ஏதோ ஒரு ஊரில் posting ஆனதுவரை எங்கள் தொடர்பு இருந்தது.

அதற்குப் பிறகு சுமார் 18 வருடங்கள் கழித்து இப்போதுதான் அந்தக் குரல்.  அனால் 18 வருடங்கள் கழித்து பேசினாலும் அந்தப் பழைய நட்பு மீண்டும் பச் என்று ஒட்டிக் கொண்டது.  பழைய நினைவுகளில் மூழ்கி மீண்டும் நிகழ் காலத்துக்கு வந்து பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.  நான் என்னுடைய குடும்ப விவரங்களை சொல்லிவிட்டு "குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்" என்று கேட்டேன்.  மறுமுனையில் சற்று அமைதி.  "இன்னும் இல்லைடா" என்றது அவனது குரல்.  எனக்கு தர்ம சங்கடமாக ஆகிவிட்டது.  உடனே வேறு விஷயத்திற்கு பேச்சை மாற்றி சென்னை வந்து சந்திக்கலாம் என்று பேச்சை முடித்தோம்.

பிறகு சென்னை வந்ததும் நானும் அவனும் வேறு சில கல்லூரி நண்பர்களும் சந்தித்து எங்கள் நட்பை புதிப்பித்துக் கொண்டோம்.

நானும் அவனும் அவரவர் பணியில் busy ஆக இருப்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் நாங்கள் constant தொடர்பில் இருந்தோம்.  மீண்டும் ஒரு முறை அவனிடமிருது அலைபேசி அழைப்பு.  இந்த முறை வார்த்தைகளில் ஆனந்தம் பொங்கியது.  விஷயம் இதுதான்.  நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவனுக்கு மழலை பாக்கியம் உண்டாகி இருந்தது. குழந்தை பிறந்ததும், போய்ப் பார்த்ததும், அந்தக் குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கெடுத்துக் கொண்டதும் எங்கள் நட்பின் ஆழத்தைக் கொஞ்சம் அதிகமாக்கியது.

அவனை கடந்த நவம்பர் மாதம் என் Partner Suresh உடன் சென்று காஞ்சிபுரத்தில் சந்தித்தேன்.  அங்குதான் அவன் பணியில் இருந்தான்.  குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டி இருப்பதால் சென்னைக்கு மாற இருப்பதாகச் சொன்னான்.  சென்னை வருவதற்கு அவனுக்கு விருப்பமே இல்லை.  சென்னையில் கடலில் கரைத்த பெருங்காயமாக காணமல் போய் விடுவோம் என்று சொன்னான்.

நான் காஞ்சிபுரத்தில் இருக்கும்போதே family ஐ கூட்டிகொண்டு வாடா.  இங்கிருக்கும் எல்லா கோயில்களுக்கும் எல்லோரும் ஒன்றாக போய் வரலாம் என்று சொன்னான்.  நானும் சரி என்று சொல்லி இருந்தேன்.

இரண்டு நாட்களுக்கு முன் என்னுடைய mail box இல் 'Saravanan updated his status' facebook message வந்திருந்தது.   நான் facebook அடிக்கடி பார்ப்பவன் இல்லை.  இப்படி ஏதாவது message வந்தால் மட்டுமே உள்ளே சென்று பார்ப்பேன்.

Facebook  ஓபன் செய்ததும் "This is Ramani. How are you ? என்று பூங்கொத்துடன் ஒரு message இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக scroll down செய்தேன். "Saro அண்ணா miss You",  "மாமா miss you", 'Saravanan Sir RIP" - படிக்கப் படிக்க தொண்டைக் குழியை ஏதோ ஒன்று அடைத்தது.  கண்களில் நீர் வழியத் தொடங்கியது.  என்னால் நம்ப முடியவில்லை.   என் நண்பர்கள் யாருக்கும் விஷயம் தெரியவில்லை.  எனக்கு அவன் அலைபேசி எண்னை அழைத்து உறுதி செய்வதற்கும் தைரியம் இல்லை.  இருந்தாலும் ஒரு முறை அழைத்தேன்.  Ring அடித்துக் கொண்டே இருந்ததால் கட் செய்துவிட்டேன். பிறகு என் நண்பர் Suresh மூலமாக விஷயத்தை உறுதி செய்துகொண்டேன்.  கடந்த February மாதம் heart attack ஏற்பட்டு இறந்து விட்டான் என்று.


அவன் இறந்த செய்தி கூட அவன் மூலமாகவே தெரிய வந்தது என்ன காரணத்தினால் என்று தெரியவில்லை.  Mobile, Whatsapp என்ற இந்தக் காலத்தில் கூட ஒரு நெருங்கிய நண்பனின் மரணம் ஒரு மாதம் கழித்து தெரிய வந்தது என்னை மிகவும் பாதித்தது.  யாரும் சொல்லவில்லை என்று நீயே சொல்லிவிட்டாயா  சரவணா ?


சில மாதங்களுக்கு முன்புதான் முகநூலில் ஒரு உருவகக் கதையை share செய்திருந்தாய்.  ஒருவனுக்கு 4 மனைவிகள்.  முதல் மனைவி நம் உடல். இரண்டாவது மனைவி நம் மனைவி மக்கள். மூன்றாவது மனைவி நம் சொத்து சுகம்.  நான்காவது மனைவி நம் ஆன்மா.  நாம் நம்முடைய முதல் மூன்று மனைவிகளையும் நன்றாக கவனிக்கிறோம். அவர்கள் நம் கூட வருவதில்லை.  ஆனால் நம் கூடவே வரும் நம் நான்காவது மனைவியான நம்முடைய ஆன்மாவை நாம் இருக்கும்போது நாம் கவனிப்பதே இல்லை என்று.  உன்னுடைய முடிவை நீ தெரிந்துதான் வைத்திருந்தாயோ ?

சரவணா நீ உன்னுடைய ஆன்மாவை நன்றாகத்தான் கவனித்திருக்கிறாய். உடலைத்தான் விட்டுவிட்டாய்.

2009 ம் ஆண்டு அலைபேசியில் உன் அழைப்பு வந்து நம் நட்பு புதிப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் உன்னுடைய இழப்பு என்னை இந்த அளவு பாதித்திருக்காது.

சரவணா, உன் மரணம் மீண்டும் ஒரு விஷயத்தை எனக்கு வலியுறித்துச்  சென்று இருக்கிறது.  ஆறுதலான வார்த்தைகளையும் அன்பான புன்னகையையும் அடுத்த வேளைக்கு தள்ளி வைத்துவிடாதே என்று.

No comments:

Post a Comment