இன்று மதுரையில் இருந்து நண்பர் திரு. செந்தில் phone செய்திருந்தார். என்ன sir உங்கள் blog-இல் ஒரு மாதமாக புதிதாக எதுவும் பதிவு செய்யவில்லையே. அடிக்கடி உங்கள் வலைதளத்தை எட்டிப் பார்த்து ஏமாந்து விடுகிறேன் என்று சொன்னார். நம்முடைய வலைதளத்தையும் தினமும் சிலர் பார்க்கின்றனர் என்பதே ஒரு பெருமைதானே.
நீங்கள் சொல்லும் விஷயம் எல்லோருக்கும் தெரிந்த பொதுவான விஷயமாக இருந்தாலும் உங்கள் எழுத்து நடை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கிறது என்றும் சொன்னார். இது போதாதா நமக்கு. ஒரு எழுத்தாளனுக்கு தேவையான அனைத்து சாமுத்ரிகா லட்சணங்கலுள் ஒரு சில நமக்கும் இருக்கிறது போலும் என்ற ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு.
அவருக்காகவே இன்று ஒரு பதிவு.
திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "சிறிது வெளிச்சம்" என்ற நூலில் "வாசனையாக மாறுங்கள்" என்ற கட்டுரை ஞாபகம் வந்தது. அதில் இருந்து சில வெளிச்சங்கள்.
"மனிதர்களின் தீராத வாசனையின் பெயர் சிரிப்பு. குழந்தைகளின் சிரிப்பை பார்த்து இருக்கிறீர்களா ? காரணம் இல்லாத சிரிப்பு அது. குழந்தைக்கு நினைவுகள் இல்லை. அது சிரிப்பை மட்டுமே தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாகக் கொண்டிருகிறது.
குழந்தைகள் சிரிக்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவில்லாதது. அப்படியான சிரிப்பு வளர வளரத் தேய்ந்து விடுகிறது. பல நேரங்களில் சிரிப்பதற்காக இடம் தேடி, ஆள் தேடி அலைகிறோம். நடுத்தர வயதில் சிரிப்பை முழுமையாக கைவிட்டு விடுகிறோம்.
தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று சிரிப்பை இழப்பது. ஞானிகளும் குழந்தைகளும் சிரிப்பதற்கு காரணத்தை நாடுவதில்லை. பனி உருகுவது போல சிரிப்பு அவர்களின் மனதில் இயல்பாக வெளிப்படுகிறது.
சிரிப்புக்கு ஒரு வாசனை இருக்கிறது. அதை நுட்பமாக உணர்ந்தவர்கள் அறிந்து இருக்கிறார்கள்". இப்படிப் போகிறது அந்தக் கட்டுரை.
இந்தக் கட்டுரையை படித்ததும் கண்ணை மூடி கொஞ்சம் சிந்தித்தேன். உண்மைதான் நாம் வாசனை என்று நினைப்பது எல்லாம் பொதுவாக அத்தர் ஜவ்வாது மற்றும் பல வாசனைத் திரவியங்களைத்தான். அதனால்தான் TMS கூட அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசியும் அங்கம் மணக்கவில்லையே என்று மனம் உருகப் பாடினார்.
இத்தகைய வாசனைத் திரவியங்கள் நம்முடைய வியர்வை நாற்றத்தில் இருந்து வேண்டுமானால் நம்மை கொஞ்சம் பாதுகாக்கலாம்.
ஆனால் நம்முடைய வாசனை என்பது அதற்கும் சற்று மேலே.
சிலர் ஏதோ ஒரு வகையில் நம்மை ஈர்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அருகில் சென்று பழகும்போது விலகி ஓடும்படி செய்து விடுவார்கள்.
யோசித்துப் பார்த்தால் நம்முடைய எண்ணங்கள் நம்மைச் சுற்றி ஒரு வாசனையை உருவாக்கி விடுகிறது. மூக்கினால் நுகர முடியாத அந்த வாசனை பிறரை நம்மை நோக்கி இழுக்கிறது அல்லது நம்மிடம் இருந்து விலக வைக்கிறது.
ரமண மகரிஷி போன்ற மகான்களின் புன்முறுவல் பூக்கும் அந்த முகங்களின் வாசனை இன்றும் நம்மை அவர்கள் இருந்த இடங்களை நோக்கி இழுக்கிறது.
நாமும் அப்படிப்பட்ட வாசனையைப் பெற கொஞ்சமாவது முயற்சி செய்வோம். அதற்கு பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். யாரிடமும் நெஞ்சில் வஞ்சம் இல்லாமல் பழகத் தெரிந்தால் போதும். உங்கள் புன்னகை தந்திரப் புன்னகையாக இல்லாமல் இருந்தால் மந்திரப் புன்னகையாக மாறும். (அடப் பாவி அதுதானே கஷ்டம் என்று சொல்கிறிர்களா ? அதுவும் சரிதான்). ஆனால் முயற்சி திருவினையாக்கும்.
Thank you so much sir.
ReplyDeleteit is a way to lighten our load and open our heart............
ReplyDelete