Sunday, July 3, 2016

நம்மைச் சுற்றியும் நாம்தான்

"ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி" என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வெளிவரும் தொடரில் கட்டுரை ஆசிரியர் திரு. ம. செந்தமிழன் பின்வரும் அகநானுற்றுப் பாடல் காட்சி ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

காதலியைக் காம உணர்வுடன் தழுவுகிறான் காதலன்.  அவனைத் தடுத்து விலக்கும் அந்த இளம்பெண் கூறுகிறாள், "தலைவா, இதோ இந்தப் புன்னைமரம் என் சகோதரி. அவளுக்கு எதிரில் என்னால் உன்னைத் தழுவ இயலாது. ஆகவே வேறு இடம் செல்வோம்".

சமீபத்தில் கண்ட ஒரு காட்சி.  ஒரு இளம்பெண்ணும் ஒரு வாலிபனும் மக்கள் நடமாட்டம் அதிகம் ஒரு தெருவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். தன்னைச் சுற்றி மக்கள் கவனிக்கிறார்கள் என்ற எந்த உணர்வும் இல்லாமல் அந்தப் பையன் அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுப்பதும் அந்தப் பெண் அதை விலக்குவதுமாக இருந்தார்கள்.  அதைப் பார்த்த ஒரு பெரியவர் அவர்களிடம் ஏதோ கேட்கப் போனார்.  அதற்கு அந்தப் பெண் கோபத்தில் சொன்ன பதில் "This is our personal matter. Mind your business. 

இன்னொரு காட்சி.  ஒரு ஆட்டோவில் ஒரு காதல் ஜோடி வண்டியை ஓட்டும் ஓட்டுனரும் எல்லா உணர்வுகளும் உள்ள சராசரியான மனிதன் என்ற எந்த உணர்வும் இல்லாமல் காதல் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

மரங்களைக் கூட சக மனிதர்களாக கருதிய சமூகத்தில் வந்தவர்கள் நாம். அதே நாம்தான் இப்போது சக மனிதர்களை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நமக்கென்று ஒரு தனியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முன்பெல்லாம் நமக்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ற அச்ச உணர்வு காதலர்களுக்கு இருக்கும்.  ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் எல்லா ஊர்களில் இருந்தும் படிப்பதற்கும் வேலைக்கும் வருவதால் அந்த அச்ச உணர்வெல்லாம் இப்போது குறைந்து விட்டது.

காதலையும் காமத்தையும் சுமந்து கொண்டுதான் இளமையைக் கடக்க வேண்டும்.  ஆனால் அதில் ஒரு sensitivity இல்லாவிட்டால் அது சில சமயங்களில் நம் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடக் கூடும்.

முன்பெல்லாம் திருமணம் நிச்சயம் செய்யும் வரை பெண்ணின் புகைப் படத்தைக் கூட கொடுக்க மாட்டார்கள்.  அதை அவ்வளவு சென்சிட்டிவிட்டியான விஷயமாக நினைத்தார்கள்.

இன்று விதவிதமான போட்டோக்களை தினந்தோறும் whatsapp லும் facebook லும் upload செய்கிறோம்.  அது யார் யாரிடம் போய் சேருகிறது என்று கூட நமக்குத் தெரிவதில்லை.  Photoshop மூலம் நம் படத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.  இதில் பெண்கள்தான் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.  ஏனென்றால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களை நாம் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். இல்லையென்றால் ஸ்வாதிகளையும், வினுப் பிரியாக்களையும் நாம் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஸ்வாதியின் குடும்பத்துக்காக அனுதாபப்படும் அதே நேரத்தில்,  ராம் குமாரின் குடும்பத்தை நினைத்தாலும் அதிக வேதனையாக இருக்கிறது.

வறுமையின் விளிம்பில் வாழும் ஒரு சாதாரண குடும்பம்.  தன் மகன் நன்றாக படித்து குடும்பத்தினை மேல் நிலைக்கு கொண்டு வருவான் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு இடி அவர்கள் வாழ்க்கையில் விழுந்திருக்கிறது. கொலைகாரன் குடும்பம் என்ற பழி வேறு.   அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் ராம் குமாரைப் பற்றியும் அவன் ஊரில் நல்லவிதமாகவே கூறுகிறார்கள்.

ஸ்வாதி நம்மில் ஒருவர் என்றால் ராம் குமாரும் நம்மில் ஒருவர்தான்.  ஆண் பெண் உறவு மிகவும் சிக்கலாக உள்ள காலக் கட்டம் இது.   ஆண் பெண் உறவை matured ஆக handle செய்ய நாமும் கற்றுக் கொண்டு நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  இதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் அதிகம்.

ராம்குமாரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை தருவதற்கு சட்டம் இருக்கிறது.  ஆனால் ராம்குமார்களை உருவாக்கும் இந்த சமூகத்தின் குற்றத்துக்கு யார் தண்டனை வழங்குவது ?

No comments:

Post a Comment