Saturday, February 18, 2017

வாழ்க ஜனநாயகம்


மீண்டும் ஒரு முறை நாம் ஓட்டு போடும் போது நம் விரலில் வைக்கப்படும் மையை நம் முகத்தில் பூசி விட்டாா்கள் நமது மாண்பு மிகுக்கள்.

இதைப் போன்ற சட்டசபை நிகழ்வுகள் நமக்குப் புதிதல்ல.  அண்ணா மறைவுக்குப் பின்பும், எம்ஜிஆா் மறைவுக்கு பின்பும் ஏற்பட்ட கலாட்டாக்களின் மறு ஒளிபரப்புதான் இன்று நடந்தது. The dust will settle soon.  

செல்வி ஜெயலலிதாவும் அரசியலில் நிறைய  நாடகங்களை அரங்கேற்றியவா்தான். ஆனால் அதை மிகக் கச்சிதமாக நிறைவேற்றி அவருக்கான ஆதரவை திரட்டிவிடுவாா்.  நாடகம் என்று தெரிந்தே நம்பும் மக்கள் நாம். கலைஞரும் அதில் ஜித்தா்.   ஆனால் திரு. ஸ்டாலினுக்கு அந்த ”ஓரங்க நாடகம்” சாியாக கைவரவில்லை.  சேலை கலைந்து ஜெயலலிதா சட்டசபையில் இருந்து வெளிவந்தபோது கிடைத்த அனுதாபம் சட்டை கிழிந்து பனியன் தெரிய சட்டசபையில் இருந்து இன்று வெளிவந்த ஸ்டாலினுக்கு கண்டிப்பாக கிடைக்காது.   அவருக்கு இருந்த Gentleman என்ற பிம்பத்தையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

தளபதியின் தளபதிகள் இன்று சட்டசபையில் போட்ட ”குத்தாட்டம்” எடப்பாடி கும்பலின் தகிடுதத்தங்களை மறைக்கும் அளவிற்கு அதிகமாகிவிட்டது.

இன்றைய சட்டசபை நிகழ்வுகளில் எனக்கு ஆறுதலாக இருந்த ஒரே விஷயம் ஓபிஎஸ் அணியினர் மிகவும் கண்ணியமான முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தவிதம்.  ஒவ்வொரு பிரிவாக சபாநாயகா் வாக்கு எடுக்கும் போது ஒவ்வொரு பிரிவிலும் ஒன்று அல்லது இரண்டு போ் மட்டுமே ஓபிஎஸ் அணியில் இருந்தாலும் தைரியமாக எழுந்து நின்று தங்கள் எதிா்ப்பை பதிவு செய்த துணிவை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

எடப்பாடி திரு. பழனிசாமி அவா்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் இன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  முதலில் அவருக்கு வாழ்த்துக்கள்.  ஆனால் இந்த வெற்றி அவருக்கு நிலையும் இல்லை அதற்கு அவருக்கு தகுதியும் இல்லை. எடப்பாடியாா் என்ற தனி நபா் மிகவும் நல்ல நபராகக்கூட இருக்கலாம். ஆனால் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட ஒருவரின் ஆசியோடும் ஆலோசனைப்படியும் ஒருவா் நம்மை ஆளவேண்டி இருந்தால் அது நம் தமிழக மக்கள் எல்லோருக்கும் கேவலம்.

மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவாா் - தம் மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்ளுவார் என்று கலைஞரையும் குடும்ப அரசியலையும் எதிர்த்தே கட்சியை வளர்த்தவா்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும். ஆனால் எடப்பாடி முதல்வரானது உறுதியான உடனே திருவாளர் தினகரன் அவா்கள் பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார்.  இனி சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் மீண்டும் தமிழகத்தை வளைக்க ஆரம்பிக்கும்.

இனி நம் முதல்வா் வாரத்திற்கு ஒருமுறை பெங்களுரு சென்று சின்னம்மாவிடமிருந்து ஆசியையும் ஆலோசனையையும் பெற்று வந்து நம்மை பரிபாலிப்பாா்.

கடவுளை நம்புவோம்.  நல்லதே நடக்கும். 

ஓம் ஸ்ரீ ஆளுநர் வித்யாசாகராய நமஹ. 


No comments:

Post a Comment