Wednesday, April 19, 2017

மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்


நாம் செய்யாத தவறுகளுக்குக் கூட வாழ்க்கை நமக்கு சில சமயங்களில் பெரும் வலியைத் தரும்போது வலி நிவாரணியாய் அமைவதும் அல்லது செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யாதிருக்கும் மனவலிமையை நமக்குத் தருவதும் புத்தகங்கள்தான். 

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சாதளையாளரும் தன்னுடைய வெற்றிக்குக் காரணமாக அல்லது தன்னுடைய வாழ்வின் திருப்புமுனையாக அமைந்ததற்கு ஏதோ ஒரு புத்தகத்தினைத்தான் பெரும்பாலும் காரணமாகக் கூறுவார்கள்.

சில மணித்துளிகள் நம்மை மகிழ்விக்கும் திரைக் கலைஞா்கள் பலர் இலட்சங்களிலும், கோடிகளிலும் புரளும்போது நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் மகத்தான எழுத்தாளா்கள் பலர் பெரும்பாலும் வறுமையில் வாழும் நிலையில்தான் எப்போதும் உள்ளனா்.  கடந்த காலங்களில் நாம் சில மகத்தான எழுத்தாளா்கள் சிலரை வறுமையிலும் நோயிலும் பறிகொடுக்காமல் இருந்திருந்தால் தமிழ் இன்னும் வளமை பெற்றிருக்கும்.

பிரபஞ்சன்.  இந்தப் பெயா் தமிழ் வாசக உலகிற்கு மிகவும் பரிச்யமான பெயா். 1961-ல் பிரபஞ்சன் எழுதிய முதற்கதை வெளியானது.  அதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளாக இலக்கியத் தளத்தில் சீராக இயங்கி தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வருகிறார்.

சாகித்ய அகாடமி போன்ற பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்ற பிரபஞ்சன் முழுநேர எழுத்தாளர்களுக்கே உண்டான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மற்றுமொரு மகத்தான எழுத்தாளா்.

பிரபஞ்சனின் இலக்கிய பங்களிப்பினை தமிழ் வாசகா்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுகூறும்விதமாக ஒரு சிறப்பு நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்த ஏப்ரல் மாதம் 29-ம் நாள் சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது.

இந்த விழாவை ஒருங்கிணைப்பவா்கள் எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளா் பவா செல்லத்துரை மற்றும் பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள்.

பிரபஞ்சன் அவர்களின் பொருளாரதாரத் தேவையை ஓரளவுக்கு நிறைவேற்றும் வகையில் அவருக்கு பத்து இலட்சம் சிறப்பு நிதியாக அளிப்பதும் இந்த விழாவின் ஒரு முக்கியமான அம்சம்.

நான் வேடியப்பனிடம் பேசும்போது வேடிக்கையாகக் கேட்டேன்.  இலட்சக்கணக்கான தமிழ் வாசகா்கள் உலகம் முழுவதும் இருக்கும்போது ஒரு ஆயிரம் போ் தலா ஆயிரம் ரூபாய் அளித்தால்கூட சுலபமாக பத்து இலட்சம் சோ்ந்துவிடுமே என்று சொன்னேன்.  அவா் சொன்னார்  ”நீங்கள் சொல்வது மிகவும் சரி.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் எல்லோரும் மற்ற யாராவது உதவுவார்கள் என்று நினைத்து விட்டுவிடுகிறார்கள். பலருக்கு தங்களால் முடிந்த தொகையை தருவதற்கு மனம் இருந்தும் தினசரி அலுவல்களில் மறந்து விடுகிறார்கள். 

அதனால் நண்பர்களே இந்தப் பதிவின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இதைப் படிக்கும் உங்களில் யாராவது பிரபஞ்சனின் வாசகராகவோ அல்லது அவரை அறிந்தவராகவோ இருந்தால் மற்றவா்கள் உதவுவதைப் பற்றி கவலைப்படாமல் சில நூறு அல்லது சில ஆயிரம் ரூபாயை பிரபஞ்சனின் வங்கிக் கணக்குக்கு நேரிடையாகவோ அல்லது அவர் பெயரில் வரைவோலை (டிடி) அல்லது காசோலை எடுத்து அனுப்பலாம்.

வங்கி ஆன்லைன் மூலம் பணம் செலுத்த விரும்புவா்கள் கீழ்க்கண்ட அக்கவுண்டில் செலுத்தலாம்.

A/c Name: Prapanchan (Mobile No.98945 83715)
A/c No. 403441392, Indian Bank, Peters Road Branch, Royapettah, Chennai
IFSC Code: IDIB000R047

வரைவோலை (டிடி) அல்லது காசோலை அனுப்ப வேண்டிய முகவரி

டிஸ்கவரி புக் பேலஸ்
6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனிசாமி சாலை
கே.கே. நகர் மேற்கு, சென்னை – 600 078
போன் 044-6515 7525

”சித்தன் போக்கு” என்ற சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் எழுத்தாளா் பெருமாள்முருகன் இப்படி குறிப்பிடுகிறார் –

”பிரபஞ்சனைப் பொருத்தவரை மனிதர்கள் மகத்தானவர்கள்.  அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவா்.  அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம்.  பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார்.  அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம் முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்”.


இப்போதும் பிரபஞ்சன் அவர்கள் அப்படியான ஒரு சூழலைத் தான் நமக்கு அமைத்துத் தருகிறார்.  அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம் முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.

பத்து இலட்சம் என்பது இந்த மகத்தான எழுத்தாளனுக்கு பெரிய தொகை அல்ல.  ஏன் தமிழ் வாசகர்களுக்குக் கூடத்தான்.

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.


Saturday, April 8, 2017

மகிழ்ச்சியின் மந்திரம்


சில வாரங்களாக என்னுடைய வலைதளத்தில் எந்தப் பதிவையும் செய்ய முடியவில்லை.  கொஞ்சம் busy. நாட்கள் போல் வாரங்கள் ஓடுகின்றன. 

இன்று என்னுடைய வலைதளத்தினை திறந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, நான் பார்க்கவில்லை என்றாலும்கூட என்னுடைய வலைதளத்தினை தினமும் ஒரு பத்து பேராவது படித்துவிட்டு (அல்லது எட்டிப் பார்த்துவிட்டு) செல்கிறார்கள் என்பது.  உண்மையிலேயே மனதுக்கு கொஞ்சம் நிறைவாக இருந்தது. அதிலும் பார்வையாளா்கள் (அல்லது வாசகர்கள்) நம் ஊரில் மட்டுமோ அல்லது சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் மட்டுமோ அல்லாது  உக்ரைன், போலந்து இன்னும் பல நாடுகளில் இருந்தும் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் போது உண்மையில் நம் வலைதளத்தினை பார்க்க வந்தார்களா அல்லது தவறி நம் வலையில் விழுந்தவர்களா என்றுகூட கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனால் ஒரு விஷயம் உறுதியாகத் தெரிந்தது.  தமிழா்கள் உலக நாடுகளில் பரவிக் கிடப்பதுபோல வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று.

என்னுடைய நண்பர்கள் சிலர் என்னுடைய பதிவுகளை பார்த்துவிட்டு பாராட்டும்போது அது அவா்களின் அன்பின் மிகுதி என்ற அளவில் மட்டுமே எடுத்துக் கொள்வேனே தவிர என்னை நான் ஒரு படைப்பாளியாக என்னை இதுவரை நினைத்துக் கொண்டதில்லை.

ஒரு வாசகனாக நான் படித்த அறிந்த விஷயங்களை மற்றவா்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். அவ்வளவுதான்.  என்னுடைய எழுத்திற்கும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதால் இனி பகிர்வதை at least வாரத்திற்கு ஒருமுறை என்று முறைப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

என்னுடைய ”கண்கவர் கயிலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும்” என்ற புத்தகத்திற்கு பிறகு ஆழ்நிலைத் தியானம் குறித்து ”மகிழ்ச்சியின் மந்திரம் ஆழ்நிலை தியானம்” என்ற புத்தகத்தினை எழுதியுள்ளேன். 

கயிலாய மலை யாத்திரை அனுபவத்தினைப் போலவே இதுவும் தியானம் குறித்த என்னுடைய அனுபவம்தான்.  ஆழ்நிலை தியானத்தினை உலகுக்கு வழங்கிய மகரிஷி மகேஷ் யோகியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஜனவரி மாதம் 12-ம் நாள் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. 

(என்னுடைய இந்தப் புத்தகத்திற்கும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தமிழக முன்னாள் முதல்வா் திரு. பன்னீர்செல்வம் அவா்கள் பெரினாவில் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் ????).


மீண்டும் சந்திப்போம்.