Wednesday, April 19, 2017

மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்


நாம் செய்யாத தவறுகளுக்குக் கூட வாழ்க்கை நமக்கு சில சமயங்களில் பெரும் வலியைத் தரும்போது வலி நிவாரணியாய் அமைவதும் அல்லது செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யாதிருக்கும் மனவலிமையை நமக்குத் தருவதும் புத்தகங்கள்தான். 

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சாதளையாளரும் தன்னுடைய வெற்றிக்குக் காரணமாக அல்லது தன்னுடைய வாழ்வின் திருப்புமுனையாக அமைந்ததற்கு ஏதோ ஒரு புத்தகத்தினைத்தான் பெரும்பாலும் காரணமாகக் கூறுவார்கள்.

சில மணித்துளிகள் நம்மை மகிழ்விக்கும் திரைக் கலைஞா்கள் பலர் இலட்சங்களிலும், கோடிகளிலும் புரளும்போது நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் மகத்தான எழுத்தாளா்கள் பலர் பெரும்பாலும் வறுமையில் வாழும் நிலையில்தான் எப்போதும் உள்ளனா்.  கடந்த காலங்களில் நாம் சில மகத்தான எழுத்தாளா்கள் சிலரை வறுமையிலும் நோயிலும் பறிகொடுக்காமல் இருந்திருந்தால் தமிழ் இன்னும் வளமை பெற்றிருக்கும்.

பிரபஞ்சன்.  இந்தப் பெயா் தமிழ் வாசக உலகிற்கு மிகவும் பரிச்யமான பெயா். 1961-ல் பிரபஞ்சன் எழுதிய முதற்கதை வெளியானது.  அதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளாக இலக்கியத் தளத்தில் சீராக இயங்கி தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வருகிறார்.

சாகித்ய அகாடமி போன்ற பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்ற பிரபஞ்சன் முழுநேர எழுத்தாளர்களுக்கே உண்டான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மற்றுமொரு மகத்தான எழுத்தாளா்.

பிரபஞ்சனின் இலக்கிய பங்களிப்பினை தமிழ் வாசகா்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுகூறும்விதமாக ஒரு சிறப்பு நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்த ஏப்ரல் மாதம் 29-ம் நாள் சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது.

இந்த விழாவை ஒருங்கிணைப்பவா்கள் எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளா் பவா செல்லத்துரை மற்றும் பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள்.

பிரபஞ்சன் அவர்களின் பொருளாரதாரத் தேவையை ஓரளவுக்கு நிறைவேற்றும் வகையில் அவருக்கு பத்து இலட்சம் சிறப்பு நிதியாக அளிப்பதும் இந்த விழாவின் ஒரு முக்கியமான அம்சம்.

நான் வேடியப்பனிடம் பேசும்போது வேடிக்கையாகக் கேட்டேன்.  இலட்சக்கணக்கான தமிழ் வாசகா்கள் உலகம் முழுவதும் இருக்கும்போது ஒரு ஆயிரம் போ் தலா ஆயிரம் ரூபாய் அளித்தால்கூட சுலபமாக பத்து இலட்சம் சோ்ந்துவிடுமே என்று சொன்னேன்.  அவா் சொன்னார்  ”நீங்கள் சொல்வது மிகவும் சரி.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் எல்லோரும் மற்ற யாராவது உதவுவார்கள் என்று நினைத்து விட்டுவிடுகிறார்கள். பலருக்கு தங்களால் முடிந்த தொகையை தருவதற்கு மனம் இருந்தும் தினசரி அலுவல்களில் மறந்து விடுகிறார்கள். 

அதனால் நண்பர்களே இந்தப் பதிவின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இதைப் படிக்கும் உங்களில் யாராவது பிரபஞ்சனின் வாசகராகவோ அல்லது அவரை அறிந்தவராகவோ இருந்தால் மற்றவா்கள் உதவுவதைப் பற்றி கவலைப்படாமல் சில நூறு அல்லது சில ஆயிரம் ரூபாயை பிரபஞ்சனின் வங்கிக் கணக்குக்கு நேரிடையாகவோ அல்லது அவர் பெயரில் வரைவோலை (டிடி) அல்லது காசோலை எடுத்து அனுப்பலாம்.

வங்கி ஆன்லைன் மூலம் பணம் செலுத்த விரும்புவா்கள் கீழ்க்கண்ட அக்கவுண்டில் செலுத்தலாம்.

A/c Name: Prapanchan (Mobile No.98945 83715)
A/c No. 403441392, Indian Bank, Peters Road Branch, Royapettah, Chennai
IFSC Code: IDIB000R047

வரைவோலை (டிடி) அல்லது காசோலை அனுப்ப வேண்டிய முகவரி

டிஸ்கவரி புக் பேலஸ்
6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனிசாமி சாலை
கே.கே. நகர் மேற்கு, சென்னை – 600 078
போன் 044-6515 7525

”சித்தன் போக்கு” என்ற சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் எழுத்தாளா் பெருமாள்முருகன் இப்படி குறிப்பிடுகிறார் –

”பிரபஞ்சனைப் பொருத்தவரை மனிதர்கள் மகத்தானவர்கள்.  அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவா்.  அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம்.  பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார்.  அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம் முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்”.


இப்போதும் பிரபஞ்சன் அவர்கள் அப்படியான ஒரு சூழலைத் தான் நமக்கு அமைத்துத் தருகிறார்.  அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம் முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.

பத்து இலட்சம் என்பது இந்த மகத்தான எழுத்தாளனுக்கு பெரிய தொகை அல்ல.  ஏன் தமிழ் வாசகர்களுக்குக் கூடத்தான்.

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment