Tuesday, May 2, 2017

மானுடம் வென்றது


The touch of grace என்று சொல்வார்கள்.  எந்த ஒரு விஷயமும் சிறப்பாக அமைய நமது முயற்சி மட்டும் போதாது.  அதற்கும் மேல் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது எப்போதும் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.  ஆனால் எழுத்தாளர் திரு. பிரபஞ்சனுக்கு சென்ற சனிக்கிழமை அது அழகாக அமைந்தது.

சென்ற பதிவில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவா்களுக்கான விழாவைப் பற்றி எழுதியிருந்தேன்.  அதில் அவருக்கு அளிக்கப்படவிருந்த ரூபாய் பத்து இலட்சம் நிதி உதவிபற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.  விழா நடைபெற்ற தினமான ஏப்ரல் 29-ம் தேதி சனிக்கிழமைக்கு முன்னதாகவே பத்து இலட்சம் நிதி சேர்ந்த தகவலை திரு. வேடியப்பன் என்னிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பத்து இலட்சம் என்பது இந்த மகத்தான எழுத்தாளனுக்கு பெரிய தொகை அல்ல.  ஏன் தமிழ் வாசகர்களுக்குக் கூடத்தான் என்று சென்ற பதிவில் எழுதியிருந்தேன்.  தமிழ் வாசகர்கள் அதை மெய்ப்பித்துவிட்டார்கள்.

பொதுவாக தமிழ் எழுத்தாளர்களை தமிழ்நாட்டைவிட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள்தான் அதிகம் பெருமைப்படுத்துகிறார்கள் என்று சொல்வார்கள்.  அது ஓரளவுக்கு உண்மையும்கூட.  நம் ஊரில் இருக்கும்போதைவிட வெளிநாடுகளில் வசிக்கும்போதுதான் நமது தாய்மொழி மீதான பற்று அதிகரிக்கிறது.

ஆனால் முதல்முறையாக ஒரு எழுத்தாளருக்கு அரசு சார்பில்லாத தனி நபா்களின் முயற்சியால் நடத்தப்பட்ட ஒரு விழாவில் புதுவை முதல்வர் திரு நாராயணசாமி, கனிமொழி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், நடிகர் திரு. சிவகுமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள், பிரபல எழுத்தாளர்கள், பிரபஞ்சனை கொண்டாடும் வாசகர்கள் என்று பலரும் கலந்து கொண்ட விழாவில், ஒரு நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக செய்த முடித்த எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர் திரு. பவா செல்லத்துரை, பதிப்பாளர் திரு. வேடியப்பன் அவர்களுக்கு எவ்வளவு வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும்.

விழாவில் பேசிய அனைவரும் பிரபஞ்சன் அவர்களின் எழுத்தில் இழையோடும் அன்பையும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையையும்தான் அதிகம் சிலாகித்துப் பேசினார்கள். 

விழாவில் ஏற்புரை அளித்த பிரபஞ்சன் ”என் வாழ்க்கையில் அன்பையும் நியாய உணர்வையும் அடிநாதமாக கொண்டு வாழ்ந்து வருகிறேன்.  அதனால் வாழ்க்கையில் ஏற்பட்ட வறுமை என்னை வருத்தவில்லை. என்ன - இருவேளை சோற்றுக்கு உத்திரவாதம் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகம் எழுதியிருப்பேன்” என்று சொன்னபோது மிகவும் கஷ்டமாக இருந்தது.  தன்னுடைய வறுமையை வெளிக்காட்டாத அவரது கம்பீரமும், தன்னுடைய சொந்த வாழ்க்கையின் அவலங்கள் குறித்த சுய பச்சாதாபம் எதுவும் இன்றி வாழ்வு குறித்த நம்பிக்கையையும், அன்பையும் வெளிப்படுத்தும் அவரது எழுத்துக்கள் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் உலகில் நிலைத்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த விழாவின் வெற்றி பிரபஞ்சனுக்கான வெற்றி மட்டுமல்ல.  மொத்த தமிழ் சமூகத்திற்கான வெற்றியாகும்.

விழா ஏற்பாட்டாளா்களுக்கு மீண்டும் ஒருமுறை தமிழ் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

பிரபஞ்சன் அவா்களின் சில எழுத்துச் சிதறல்கள்

”மனசை போஷி. ஆனால் கடிவாளத்தை உன் கையில் வைத்துக் கொள். அதுபோதும். நிம்மதி பெறு. நீ உத்தமனடா குழந்தை. நீ தொட்டதெல்லாம் துலங்கும்.”

”குற்றம் எது. சரி எது ?. எல்லாம் பிரமைதானேடா குழந்தை.  மனசை அடிக்கடித் துடைத்துச் சுத்தம் செய்துகொள். அது போதும்.”

”தரிசு மண்ணில் விதைச்சவனும் தாசிக்கு கொடுத்தவனும் எந்தக் காலத்திலும் சுகம் பெறப் போவதில்லை.  தமிழ் மொழியில்தான் எத்தனைப் பழமொழிகள்.”

”இந்நேரம் நீ கல்யாணம் பண்ணிட்டு இருந்தா, நாலு புள்ளைகளைப் பெத்துக்கிட்டு இருப்பே.  என்னத்துக்கு இந்த மாதிரி ஊா் சுமையைத் தோள்லே போட்டுக்கிட்டு திரியறே சாமி? எதுக்கு மனுஷர் குடும்பத்தை துறக்கணும் ? பொண்டாட்டி புள்ளை சுகத்தை இழக்கணும் ? எனக்குத் தெரியும் – சாமியார்னு ஒரு மனுஷன் என்னத்துக்குப் புறப்படணும்? எல்லோரையும் அன்பு பண்ணனும்.  பொண்டாட்டி புள்ளைன்னு ஆயிட்டா, எல்லாத்தையும் சமமா பார்க்க முடியாதே.  அதான் வீட்டைவிட்டு புறப்பட்டுட்டியாக்கும்.  அதுவும் சரிதான்”

”மற்றவா்களுக்கு காட்டும் முகம் அழகாக புத்துணா்ச்சியோடு இருக்கணும்.  நம் கஷ்டம் நம்ம கிட்டயே இருக்கட்டும்.  அதை எதுக்கு மற்றவங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டணும் ?”

”பிறருக்குக் காட்டும் முகம், அது அசல் முகமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.  அதே சமயம் அது பொய்யாகவும் இருந்துவிடக்கூடாது. தன் அசல் முகத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதிகளை மட்டும் பிறருக்கு அன்பளிப்பாக, ஒரு “பொக்கே“வாக அளிப்பது.”


இன்னும் நிறையச் சிதறல்கள் இருக்கிறது. அதற்கான நேரமும் இன்னும் இருக்கிறது. 

No comments:

Post a Comment