ரஜினியின்
அரசியல் பிரவேசம் குறித்து கரு. பழனியப்பனின் கருநீலம் யூடியுப் வீடியோவை பார்த்தவுடன்
ரஜினியின் அரசியல் குறித்த என்னுடைய எண்ணங்களை எழுதலாம் என்று உட்கார்ந்தேன். மணி என்னவென்று
கைக்கடிகாரத்தை பார்த்தவுடன் என் மனதில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் ”A Brief Hisory of
Time” என்ற புத்தகத்தின் பெயா் ஓடியது. ரஜினி
இமயமலையில் இருந்து திரும்பி வரட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது ஸ்டீபன்
ஹாக்கிங் பற்றி எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஏனென்றால் சில மனிதா்கள் மனித குலத்திற்குப் பொதுவானவா்கள். அவா்களைப் பற்றி ஆழ்ந்து நினைப்பதே நம்மை ஒரு அங்குலமாவது
நம் வாழ்வில் உயா்த்தும்.
ஸ்டீபன்
ஹாக்கிங்கின் வாழ்க்கையைப் பற்றி நினைக்கும்போது எனக்கு நினைவுக்கு வந்த திருக்குறள்
– ”தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்”. எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள் பாருங்கள். In fact ஸ்டீபன் ஹாக்கிங் கடவுள் நம்பிக்கை இல்லாதவா்.
தன்னுடைய
21-வது வயதில் நரம்பு முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் செயல் இழந்து
இன்னும் ஒரு சில வருடங்களுக்கு மேல் உயா் வாழ்வது கடினம் என்று மருத்துவா்கள் அறிவித்தபிறகு,
கிட்டத்தட்ட 55 வருடங்கள் வாழ்ந்து தன்னுடை 76-வது வயதில் மரணத்தினை தழுவியிருக்கிறார். முழுமையற்ற உடலில் ஒரு முழுமையான வாழ்வு.
நாம்
சின்னதாக ஒரு தலைவலி அல்லது உடல்வலி வந்தாலே ஒரு வேலையும் செய்யாமல் அப்படியே முடங்கிவிடுகிறோம். ஆனால் உடல் முழுதும் முடங்கிப் போன ஒருவா் தன் வாழ்நாள்
முழுவதும் அதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தது மட்டுமல்லாமல் இந்த நுாற்றாண்டின்
இணையற்ற விஞ்ஞானிகளுள் ஒருவராகவும் தன்னை நிருபித்துவிட்டுப் போயிருக்கிறார்.
நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் ஒரு வாசகம் – ”வரங்களையே சாபங்களாகிக் கொண்டு கஷ்டப்படும் மனிதா்கள் பலா் உள்ள இந்த உலகில் சிலர் மட்டும் சாபங்களைக்கூட வரங்களாகக் மாற்றி வாழ்க்கையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையையே ஜெயித்துக் காட்டுகின்றனா்”.
நம் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு
ஒரு நாள் வாழ்ந்து பார்த்தால் புரியும் உடல் முழுவதும் இயங்காத ஸ்டீபனின் வாழ்க்கை
எவ்வளவு கொடுமையானது என்றும் நம்முடைய வாழ்க்கை எப்படி ஒரு வரமாக நமக்கு இருக்கிறது
என்றும்.
ஆனால்
ஸ்டீபன் அது குறித்த எந்தக் கவலையுமின்றி இந்தப் பிரபஞ்சத்தினை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். புத்தகங்கள் எழுதிக்கொண்டிருந்தார். நாடு நாடாக
பயணம் செய்து கொண்டிருந்தார்.
சில
வருடங்களில் இறந்துவிடுவீா்கள் என்று மருத்துவா்கள் கூறிய உண்மையை சிறிதளவுகூட மனதில் ஏற்றிக்
கொள்ளாமல் தொடா்ந்து இயங்கிக் கொண்டே இருந்ததுதான் அவர் இத்தனை வருடங்கள் வாழ்ந்ததற்கு
முக்கிய காரணம் என்று அவரது வாழ்வை ஆராய்ந்தவா்கள் கூறுகிறார்கள். ஆனால் நாமோ இல்லாத சுமையை இருப்பதாக மனதில் ஏற்றிக்
கொண்டு அல்லல் பட்டு வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
கண்ணதாசன்
அா்த்தமுள்ள இந்து மதம் (ஆறாவது பாகம் – நெஞ்சுக்கு நிம்மதி) என்ற புத்தகத்தில் எழுதியிருப்பார்
– நம்பிக்கைதான் வாழ்க்கை. இன்றைய பொழுது நன்றாக
இருக்கும் என்று நம்பு. நன்றாகவே இருக்கும். தண்ணீரில் விழுந்து விட்டால் நீந்தத் தெரியும்
என்று நம்பு. நீந்தத் தெரிந்து விடும். கடன் வந்துவிட்டால் கட்ட முடியம் என்று
நம்பு. கட்டிவிட முடியும்.
அப்படி
நம்பிக்கை என்ற துடுப்பை மட்டுமே பற்றிக் கொண்டு தான் மட்டுமே கரை சேராமல் இந்த மானுடம்
முழுவதற்கும் நம்பிக்கையை ஊட்டிய ஸ்டீபன் ஹாக்கிங் போன்றவர்களின் வாழ்க்கையை நாமும்
அறிந்து கொண்டு நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது நம் கடமை.
விஞ்ஞானியும்
மெய்ஞானியும் இணையும் இடம் ஒன்று இருக்கிறது என்றால் அது இந்த அண்ட சராசரங்களை அறியும்
ஆவல்தான். அந்த வகையில் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கும்
நம் நாட்டின் பெரும் சித்தா்களும் ஒரே நோ்க்கோட்டில்தான் நிற்கிறார்கள்.
ஸ்டீபன்
ஹாக்கிங்கின் வார்த்தைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான சில வரிகள் –
”வாழ்க்கை
எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், உங்களால் ஏதோ ஒன்றை செய்து இந்த வாழ்க்கையில் நீங்கள்
வெற்றி பெறமுடியும்”.
”தலை நிமிர்ந்து வானில்
உள்ள நட்சத்திரங்களைப் பாருங்கள். தலை குனிந்து
உங்கள் பாதங்களை பார்த்துக் கொண்டிருக்காதீா்கள்.
உங்களைச் சுற்றி நீங்கள் காணும் காட்சிகளின் உண்மைத் தன்மையை அறிவதில் ஆா்வம்
கொள்ளுங்கள். இந்தப் பிரபஞ்சம் இயங்குவதின் காரணத்தினை அறிவதில் முனைப்புடன் இருங்கள்.
No comments:
Post a Comment