Sunday, March 23, 2014

நம்பிக்கையில் நிம்மதி

நம்பிக்கையில் நிம்மதி

நான் அடிக்கடி படிக்கும் புத்தகங்களில் ஒன்று கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்.  இதன் ஆறாம் பாகம் 'நெஞ்சுக்கு நிம்மதி' என்ற புத்தகத்தை இன்று புரட்டிக் கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது 'நம்பிக்கையில் நிம்மதி' என்ற தலைப்பு.  வாருங்கள் கவிஞரின் வார்த்தைகளை கொஞ்சம் உள் வாங்கலாம்.

எதன் மீது எனக்கு சந்தேகம் வந்தாலும் நிம்மதி தொலைகிறது.  எது பிடிக்கவில்லையோ அதில் இருந்து ஒதுங்கி  நில். ஆனால் தினமும் சந்தேகப்பட்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொள்ளாதே.

சாப்பிட்டு முடித்த பின் எதை சாப்பிட்டோமோ என்று நினைத்தால் அடிவயிற்றை கலக்கும்.  சாப்பிடுவதற்கு முன்னாலேயே நன்றாகப் பார்.

யோசித்து செய்த முடிவுகளில் நம்பிக்கை வை.

திருப்பதிக்கு போவது என்று முடிவு கட்டினால் திரும்பி வரும்போது பலன் இருக்கும் என்று நம்பு.

நம்பிக்கையும் சந்தேகமும் மாறி மாறி இருந்தால் அப்போதும் நிம்மதி இருக்காது.  மீன் கூடைக்கு பக்கத்தில் பூக்கூடையை வைத்தால் மீன் வாசமும் தெரியாது பூ வாசமும் தெரியாது. கலப்படமான ஒரு அருவருப்பே தோன்றும்.

இன்றைய பொழுது நன்றாக இருக்கும் என்று நம்பு. நன்றாகவே இருக்கும்.

தண்ணீரில் விழுந்து விட்டால் நீந்தத்  தெரியும் என்று நம்பு. நீந்தத் தெரிந்து விடும்.  கடன் வந்துவிட்டால் கட்ட முடியம் என்று நம்பு. கட்டிவிட முடியும்.

திருநீறோ திருமண்ணோ இடும் போது கடனுக்கு இடாமல் நம்பிக்கையில் இடு. அவை இருக்கும்வரை மூளை பிரகாசிக்கும்.

நாளைக்குத்  திருச்சிக்கு போகிறோம் என்று Rockfort  எக்ஸ்ப்ரஸில் ஏறு.  அது திருச்சி போய்  சேர்ந்து விடும். இதுவா போகும் என்று சந்தேகப்படு.  அது புறப்படவே புறப்படாது.

நம்பினால் கை கொடுப்பது நம்பிக்கை.

என்ன நண்பர்களே எப்படி இருக்கிறது கவிஞரின் வார்த்தைகள். எப்போதாவது நமக்கு வாழ்க்கையில் அவநம்பிக்கை தோன்றினால் சற்று கவிஞரின் வார்த்தைகளை படிப்போம். நம்பிக்கை கொள்வோம்.

  










Saturday, March 8, 2014

பெண்மையை போற்றுவோம்


பெண்மையை போற்றுவோம் 

பத்து  மாதம் சுமந்த கடனுக்காக காலம் முழுவதும் ஆண்களை வட்டி கட்ட வைப்பவர்கள் பெண்கள்.  ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் பப்பில் (PUB) உட்கார்ந்து "கப் கப்" என்று அடிப்பவர்கள் பெண்கள். உள்ளத்து அழகை  விட உடல் அழகை அதிகம் நம்புவர்கள் பெண்கள். மூக்கை சிந்தி சிந்தியே ஆண்களை சந்தி சிரிக்க வைப்பவர்கள் பெண்கள்.  சுற்றும் வரை சுற்றி விட்டு கடைசியில் "அண்ணா" என்று அல்வா கொடுப்பவர்கள் பெண்கள்.  (எல்லா இடத்திலும் இந்தக  காலத்து பெண்கள் என்று படிக்கவும், இல்லைஎன்றால் அந்தக் காலத்துப் பெண்கள் (ஆயாக்கள் என்ற பாட்டிகள்) கோபித்துக் கொள்வார்கள்).

மேலே கூறியதில் கூட குறைய இருந்தாலும் உண்மைதானே என்று நினைக்கும் ஆண்களா (அல்லது பெண்களா) நீங்கள்.

தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும்.  விதி விலக்குகளை வாழ்வின் விதியாக எண்ணி விடாதீர்கள்.

பொதுவாக ஒரு பெண் தாயாக, சகோதிரியாக, மனைவியாக, மகளாக மற்றும் நட்பாக - ஏதாவது ஒரு உறவில் மற்றொரு ஆணை வழி நடத்துபவளாக இருந்து கொண்டுதான் இருக்கிறாள்.

என் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் (அப்படி என்ன பெரிய முன்னேற்றம் என்று கேட்டு விடாதீர்கள்) என் மனைவியின் பங்கு மிக அதிகம் என்று சொன்னால் அது மிகை இல்லை.  சின்ன சின்ன விசயங்களில் கூட என்னிடம் முரண்படும் என் மனைவி, நான் எடுக்கும் முக்கிய முடிவுகளில் எல்லாம் தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்ததால்தான் நான் இன்று வெளி உலகில் நம்பிக்கையுடன் நடை போட முடிகிறது.

இன்று உலகில் வெற்றிகரமாக உலவி வரும் பல ஆண்களின் பின்னால் சத்தமில்லாமல் தோள் கொடுப்பவர்கள் பெண்கள்தான்.

ஒவ்வொரு ஆணும் தன் வீட்டுப் பெண்களை (மனைவியோ, தாயோ, சகோதிரியோ, அல்லது மகளோ) முழுமையாக மதித்து அன்பு செலுத்தினாலே உலகில் பல தவறான உறவுகள் ஏற்படாது என்பது என் தாழ்மையான கருத்து.

தவறான உறவால் கேட்டுப் போன ஆண்களைவிட சரியான நட்பால் உயர்ந்த ஆண்கள் அதிகம்.  (பல சமயங்களில் சில ஆண்களின் சுயநலத்தால் தவறிய பெண்கள்தான் அதிகம்).

நீரின்றி அமையாது உலகு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை பெண் இன்றி அமையாது ஆணின்  வாழ்வு (இதற்கு முற்றும் துறந்த ஆதி சங்கருரும், ரமணருமே சாட்சி).

பெண்களை மதிப்போம்.  பெண்களை உயர்த்துவோம்.  பெண்களால் உயர்வோம்.





Saturday, March 1, 2014

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

படுத்த பத்தாவது நொடியில் ஆழ் துயில் கொள்ளும் எனக்கு மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் முழிக்க வேண்டும் என்ற நினைவே மஹா அசதியை தந்தது.  என்றாலும் 'எண்ணிய முடிதல் வேண்டும்'  என்ற முடிவில் முழிக்க ஆரம்பித்தேன் (பரிட்சையில் கூட இப்படி முழித்தது இல்லை).

டிவியை ஆன் செய்து ஒவ்வொரு சேனலாக மாற்றினேன்.  நம்மை தூங்க விடக் கூடாது என்று ஒவ்வொரு சேனலும் வேலை செய்து கொண்டிருந்தது. ஈஷா யோகாவின் மஹா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிரந்த சேனலில் கவனத்தை செலுத்தினேன்.

சத்குரு அவர்களின் உரையும், மக்கள் கூட்டமும், இசையும், அந்த இடத்தில் ஒரு சிறந்த  அதிர்வலையை ஏற்படுத்தி இருந்ததை உணர முடிந்தது.  சத்குரு "ஷம்போ" மஹா மந்திரத்தை தியானம் செய்ய சொன்னதும் மொத்த கூட்டமும் அவர் சொன்னபடியே கைகளை வயிற்றுக்கும்  மார்புக்கும் இடையில்  வைத்து தியானம் செய்யத்  தொடங்கியது.

நானும் என் வீட்டில் இருந்தபடியே தியானம் செய்யத் தொடங்கினேன். கொஞ்ச நேரம்தான்.     "ஷம்போ"  "அம்போ" ஆகிவிட்டது. முழித்துப் பார்த்தால் ஒரு அரை மணி நேரம் ஆகிவிட்டிருந்தது.  நான் ஆழ் நிலை தூக்கத்தில் இருந்தேனா  அல்லது  ஆழ் நிலை தியானத்தில் இருந்தேனா  என்று தெரியவில்லை.  ஆனால் மனம் இப்போது நல்ல விழிப்புடன் இருந்தது.

என் விழிப்பைப் பற்றி கவலைப் படாமல் என் மனைவியும் குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் - எங்கே யாரவது தூக்கத்தைப் பறித்துக் கொண்டு விடுவார்களோ என்பது போல போர்வையை இழுத்துப் போர்த்தியபடி இருந்தார்கள்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நாமும்  போர்வைக்குள் அடைக்கலம் ஆகி விடுவோம் என்ற பயத்தில் வெளியே வந்து,  பின்னிரவை புத்தகம் படித்துக்கொண்டும், டிவி பார்த்துக்கொண்டும், ஊஞ்சல் ஆடிக் கொண்டும் மெதுவாக கழித்தேன்.

பொதுவாக கண் முழிப்பவர்கள் கோவிலுக்கு சென்றோ அல்லது சத்சங்கத்திலோ நேரத்தைக்  கழிப்பார்கள்.  ஆனால்  நான் மட்டும் வள்ளலார் சொன்னபடி "தனித்து இருந்து விழித்து இருந்தேன்".

முடிந்தால் ஒரு இரவு தனித்து இருந்து விழித்துப் பாருங்கள். வாழ்கையின் மற்றொரு கோணம் புரிய ஆரம்பிக்கும்.