Saturday, March 8, 2014

பெண்மையை போற்றுவோம்


பெண்மையை போற்றுவோம் 

பத்து  மாதம் சுமந்த கடனுக்காக காலம் முழுவதும் ஆண்களை வட்டி கட்ட வைப்பவர்கள் பெண்கள்.  ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் பப்பில் (PUB) உட்கார்ந்து "கப் கப்" என்று அடிப்பவர்கள் பெண்கள். உள்ளத்து அழகை  விட உடல் அழகை அதிகம் நம்புவர்கள் பெண்கள். மூக்கை சிந்தி சிந்தியே ஆண்களை சந்தி சிரிக்க வைப்பவர்கள் பெண்கள்.  சுற்றும் வரை சுற்றி விட்டு கடைசியில் "அண்ணா" என்று அல்வா கொடுப்பவர்கள் பெண்கள்.  (எல்லா இடத்திலும் இந்தக  காலத்து பெண்கள் என்று படிக்கவும், இல்லைஎன்றால் அந்தக் காலத்துப் பெண்கள் (ஆயாக்கள் என்ற பாட்டிகள்) கோபித்துக் கொள்வார்கள்).

மேலே கூறியதில் கூட குறைய இருந்தாலும் உண்மைதானே என்று நினைக்கும் ஆண்களா (அல்லது பெண்களா) நீங்கள்.

தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும்.  விதி விலக்குகளை வாழ்வின் விதியாக எண்ணி விடாதீர்கள்.

பொதுவாக ஒரு பெண் தாயாக, சகோதிரியாக, மனைவியாக, மகளாக மற்றும் நட்பாக - ஏதாவது ஒரு உறவில் மற்றொரு ஆணை வழி நடத்துபவளாக இருந்து கொண்டுதான் இருக்கிறாள்.

என் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் (அப்படி என்ன பெரிய முன்னேற்றம் என்று கேட்டு விடாதீர்கள்) என் மனைவியின் பங்கு மிக அதிகம் என்று சொன்னால் அது மிகை இல்லை.  சின்ன சின்ன விசயங்களில் கூட என்னிடம் முரண்படும் என் மனைவி, நான் எடுக்கும் முக்கிய முடிவுகளில் எல்லாம் தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்ததால்தான் நான் இன்று வெளி உலகில் நம்பிக்கையுடன் நடை போட முடிகிறது.

இன்று உலகில் வெற்றிகரமாக உலவி வரும் பல ஆண்களின் பின்னால் சத்தமில்லாமல் தோள் கொடுப்பவர்கள் பெண்கள்தான்.

ஒவ்வொரு ஆணும் தன் வீட்டுப் பெண்களை (மனைவியோ, தாயோ, சகோதிரியோ, அல்லது மகளோ) முழுமையாக மதித்து அன்பு செலுத்தினாலே உலகில் பல தவறான உறவுகள் ஏற்படாது என்பது என் தாழ்மையான கருத்து.

தவறான உறவால் கேட்டுப் போன ஆண்களைவிட சரியான நட்பால் உயர்ந்த ஆண்கள் அதிகம்.  (பல சமயங்களில் சில ஆண்களின் சுயநலத்தால் தவறிய பெண்கள்தான் அதிகம்).

நீரின்றி அமையாது உலகு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை பெண் இன்றி அமையாது ஆணின்  வாழ்வு (இதற்கு முற்றும் துறந்த ஆதி சங்கருரும், ரமணருமே சாட்சி).

பெண்களை மதிப்போம்.  பெண்களை உயர்த்துவோம்.  பெண்களால் உயர்வோம்.





No comments:

Post a Comment