Saturday, March 1, 2014

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

படுத்த பத்தாவது நொடியில் ஆழ் துயில் கொள்ளும் எனக்கு மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் முழிக்க வேண்டும் என்ற நினைவே மஹா அசதியை தந்தது.  என்றாலும் 'எண்ணிய முடிதல் வேண்டும்'  என்ற முடிவில் முழிக்க ஆரம்பித்தேன் (பரிட்சையில் கூட இப்படி முழித்தது இல்லை).

டிவியை ஆன் செய்து ஒவ்வொரு சேனலாக மாற்றினேன்.  நம்மை தூங்க விடக் கூடாது என்று ஒவ்வொரு சேனலும் வேலை செய்து கொண்டிருந்தது. ஈஷா யோகாவின் மஹா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிரந்த சேனலில் கவனத்தை செலுத்தினேன்.

சத்குரு அவர்களின் உரையும், மக்கள் கூட்டமும், இசையும், அந்த இடத்தில் ஒரு சிறந்த  அதிர்வலையை ஏற்படுத்தி இருந்ததை உணர முடிந்தது.  சத்குரு "ஷம்போ" மஹா மந்திரத்தை தியானம் செய்ய சொன்னதும் மொத்த கூட்டமும் அவர் சொன்னபடியே கைகளை வயிற்றுக்கும்  மார்புக்கும் இடையில்  வைத்து தியானம் செய்யத்  தொடங்கியது.

நானும் என் வீட்டில் இருந்தபடியே தியானம் செய்யத் தொடங்கினேன். கொஞ்ச நேரம்தான்.     "ஷம்போ"  "அம்போ" ஆகிவிட்டது. முழித்துப் பார்த்தால் ஒரு அரை மணி நேரம் ஆகிவிட்டிருந்தது.  நான் ஆழ் நிலை தூக்கத்தில் இருந்தேனா  அல்லது  ஆழ் நிலை தியானத்தில் இருந்தேனா  என்று தெரியவில்லை.  ஆனால் மனம் இப்போது நல்ல விழிப்புடன் இருந்தது.

என் விழிப்பைப் பற்றி கவலைப் படாமல் என் மனைவியும் குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் - எங்கே யாரவது தூக்கத்தைப் பறித்துக் கொண்டு விடுவார்களோ என்பது போல போர்வையை இழுத்துப் போர்த்தியபடி இருந்தார்கள்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நாமும்  போர்வைக்குள் அடைக்கலம் ஆகி விடுவோம் என்ற பயத்தில் வெளியே வந்து,  பின்னிரவை புத்தகம் படித்துக்கொண்டும், டிவி பார்த்துக்கொண்டும், ஊஞ்சல் ஆடிக் கொண்டும் மெதுவாக கழித்தேன்.

பொதுவாக கண் முழிப்பவர்கள் கோவிலுக்கு சென்றோ அல்லது சத்சங்கத்திலோ நேரத்தைக்  கழிப்பார்கள்.  ஆனால்  நான் மட்டும் வள்ளலார் சொன்னபடி "தனித்து இருந்து விழித்து இருந்தேன்".

முடிந்தால் ஒரு இரவு தனித்து இருந்து விழித்துப் பாருங்கள். வாழ்கையின் மற்றொரு கோணம் புரிய ஆரம்பிக்கும்.


  






No comments:

Post a Comment