Saturday, July 4, 2015

இணங்கி இருக்கும் கலை


சமீபத்தில் ஓஷோவின் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன்.  இணங்கி இருக்கும் கலை என்ற தலைப்பில் கொடுக்கப் பட்டிருந்த அவருடைய கருத்துக்கள் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருந்தது. 

நம்முடன் நாம் கொண்டிருக்கும் உறவுதான் அடுத்தவருடன் நாம் கொண்டிருக்கும் உறவுக்கும் அடிப்படை என்ற அவருடைய கருத்து மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்று.  

இதோ ஓஷோவின் வார்த்தைகள்.....
  
அன்பு என்பது அடுத்தவருடன் இணங்கி இருக்கும் கலை. தியானம் என்பது நீ உன்னுடன் இணங்கி இருத்தல். அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தன்னுடன் எப்படி இருப்பது என்று தெரியாத ஒருவரால் மற்றவருடன் உண்மையாக தொடர்பு கொள்ள  முடியாது. அவரது உறவுகள் அருவெறுக்கதக்கதாக, அசிங்கமானதாக, விபத்து போல, இருக்கும். ஒரு நிமிடம் எல்லாமும் நன்றாக இருக்கும், மற்றொரு நிமிடம் எல்லாமும் தவறாகி விடும். அது எப்போதும் மேலும் கீழுமாக சென்று வரும். அதற்கு ஆழமிருக்காது. அது மிகவும் கூச்சலிடும். அது உன்னை ஆக்ரமித்திருக்கும். ஆனால் அதில் எந்த லயமும் இருக்காது, அது உன்னை இயற்கையின் உயரங்களுக்கோ, இருப்பின் ஆழங்களுக்கோ எடுத்துச் செல்லாது.
மற்றொரு வகையிலும் இது அப்படித்தான். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவருக்கு தன்னுடன் தொடர்பு கொள்வதும் மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் தொடர்பு கொள்ளும் கலை என்பது அதேதான். உன்னுடன் நீ தொடர்பு கொள்வதோ, அன்றி மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதோ ஒன்றேதான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை.
இவை ஒரே நேரத்தில் சேர்ந்தே கற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவற்றை பிரிக்க முடியாது. மக்களுடன் இரு. தன்னுணர்வின்றி இருப்பது போல இருக்காதே. உணர்வுடன் இரு. புல்லாங்குழல் வாசிப்பது போல, ஒரு பாடல் பாடுவது போல மக்களுடன் தொடர்பு கொள். ஒவ்வொருவரும் ஒரு இசைக் கருவி போல. மரியாதை கொடு, அன்பு செய், அவர்களை ஆராதனை செய். ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் இறைமை ஒளிந்திருக்கிறது.
அதனால் மிகவும் கவனமாக இரு. மிகவும் ஈடுபாட்டுடன் இரு. நீ சொல்வது என்ன என்பதில் கவனமாக இரு. நீ என்ன செய்கிறாய் என்பதில் கவனமாக இரு. சிறிய விஷயங்கள் உறவை சிதைத்துவிடும். சிறிய விஷயங்கள் உறவை மிகவும் அழகாக்கிவிடும். சில நேரங்களில் ஒரு புன்னகை கூட அடுத்தவரின் இதயத்தை உனக்கு திறந்துவிடும். சில நேரங்களில் உன்னுடைய கண்களில் இருக்கும் ஒரு தவறான பார்வை கூட அடுத்தவரின் இதயத்தை மூடி விடும். இதுதான் மிக மென்மையான செயல்பாடு. இதை ஒரு கலை. ஒரு ஓவியன் வண்ணத்திரையில் எவ்வளவு கவனமாக வரைவானோ அதைப் போலத்தான் இதுவும். ஒரு கோடு கூட வித்தியாசத்தை உண்டாக்கி விடும். ஒரு உண்மையான ஓவியனால் ஒரு சிறிய கோட்டின் மூலம் மிகப் பெரிய வித்தியாசத்தை கொண்டு வர முடியும்.
வாழ்க்கையை மிகவும் கவனத்துடன், மிகவும் மென்மையாக நுணுக்கமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் மற்றவர்களுடன் நாம் தொடர்பு கொள்வது என்பது ஒரு கண்ணாடி போல. நீ என்ன செய்கிறாய், அதை எப்படி செய்கிறாய், என்ன நிகழ்கிறது என்று பார். அடுத்தவர்களுக்கு என்ன நிகழ்கிறது, நீ அவர்களது வாழ்க்கையை துயரமானதாக மாற்றுகிறாயா, நீ அவர்களுக்கு வலி கொடுக்கிறாயா, நீ அவர்களுக்கு ஒரு நரகமாக மாறுகிறாயா, அப்படி என்றால் விலகிவிடு. உன் வழியை மாற்றிக் கொள். உன்னைச் சுற்றி வாழ்க்கையை அழகாக்கு. உன்னை சந்திக்கும் ஒவ்வொருவரும் அதை ஒரு பரிசாக உணர வேண்டும். உன்னுடன் இருப்பதாலேயே ஏதோ ஒன்று பொங்கி பெருக வேண்டும், ஏதோ ஒன்று வளர வேண்டும், இதயத்துள் பாடல் மலர வேண்டும், மலர்கள் மலர வேண்டும். தனிமையில் இருக்கும்போது மௌனத்தில் இரு, நிசப்ததில் இரு, உன்னை நீயே கவனி.
எப்படி பறவைக்கு இரண்டு சிறகுகள் இருக்கிறதோ அது போல அன்பும் தியானமும் உனது இரண்டு சிறகுகள் ஆகட்டும். அவை இரண்டிற்க்கும் ஒத்த லயத்தை உருவாக்கு. அப்போது அவை இரண்டும் ஒன்றுகொன்று பிளவுபடாது, ஒன்றையொன்று வளப்படுத்தும், ஒன்றுகொன்று ஊட்டப்படுத்தும், ஒன்றுக்கொன்று உதவும். இதுதான் உன் பாதை. அன்பும் தியானமும் ஒருங்கிணைந்தது.


Sunday, June 28, 2015

கட்டாய ஹெல்மெட்


ஜூலை 1 முதல் வசூல் வேட்டை தீவிரமாகும். அன்றிலிருந்து ஹெல்மெட் அணிவது மீண்டும் கட்டாயமாகிறது.  சில வருடங்களுக்கு முன்புதான் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.  எப்போது அதை வாபஸ் பெற்றார்கள், மீண்டும் கட்டாயமாக்குவதற்கு ?

நாட்டில் தினமும் நடக்கும் சாலை விபத்துக்களைப் பற்றி அறியும் போது தலைக் கவசத்தின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது.   ஆனால் நமது அரசாங்கம் செய்துள்ள அறிவிப்பைப் பார்க்கும் போது மக்களின் உயிர் மேல் இருக்கும் அக்கறையை விட stock clearance  sale முனைப்போடு செயல்படுவது போல் உள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஹெல்மெட் அணிந்து சென்றும்  கிரிதரன் என்ற இளைஞர் விபத்து என்ற பெயரில் அநியாயமாக கொல்லப்பட்டார்.  ஒழுங்கான சாலை வசதிகள், விளக்கு வசதிகள் இல்லாமல் பல விபத்துக்கள் நடக்கின்றன.  இதைப் பற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.   ஆனால் வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது. 

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிய வேண்டும். சரி. மிகவும் நியாயமானது.  பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. இனிமேல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது கையிலேயே ஒரு ஹெல்மெட்டையும் கொண்டு செல்வது உசிதம்.  வழியில் அப்பா, அண்ணன்,  கணவன் , நண்பன் என்று யாரைப் பார்த்தாலும் அவர்களுடன் வண்டியில் ஏறி வருவதற்கு வசதியாக இருக்கும்.

இன்று சாலை விபத்துக்களின் மூல காரணமாக இருப்பது மது என்ற  அரக்கன். ஊரெங்கும் பார்களைத்  (bar)  திறந்து அரசாங்கமே ஊற்றிக் கொடுத்துவிட்டு கட்டாய ஹெல்மெட்  என்று சொல்வது காறித் துப்பிவிட்டு கன்னத்தை துடைத்துக் கொள் என்று சொல்வது போல் உள்ளது.

ஹெல்மெட் எல்லாம் விற்றுத் தீர்ந்த பிறகு கட்டாய ஹெல்மெட் கட்டாயம் பிசுபிசுத்துப் போகும்.  அதுவரை காந்தி சிரிக்கும் கரன்சி நோட்டுக்கள் கொஞ்சம் கைவசம் இருக்கட்டும்.

Saturday, June 6, 2015

நூடுல்ஸ் நொந்த கதை

நமக்கு ஏதாவது ஏமாற்றம், வேதனை  அல்லது விரக்தி ஏற்பட்டால் நொந்து நூலாகிவிட்டேன் அல்லது நூடுல்ஸ் ஆகிவிட்டேன் என்று  சொல்வது வழக்கம்.  ஆனால்  இப்போது அந்த நூடுல்ஸ்சே நொந்து போய் இருக்கிறது.

நம்ம ஊரில் எப்போதும் உள்ள ஒரு பழக்கம் ஒரு ஆளையோ அல்லது பொருளையோ தூக்கிவிடும் போதும் தகுதிக்கு மேல் தூக்கி விடுவோம், அதே போல் கீழே விழும்போதும் சகட்டுமேனிக்கு மிதித்து துவைத்து விடுவோம். இப்போது Nestle வின் Maggi நூடுல்ஸுக்கு நேரம் சரியில்லை.

இன்று 20 முதல் 30 வயதுள்ள அனைவரும் Maggi நூடுல்ஸ் சாப்பிட்டு வளர்ந்த குழந்தைகளாகத்தான் இருப்பார்கள்.  மம்மி கையால் நூடுல்ஸ் சாப்பிடாதவர்கள் கூட மனைவி கையால் சாப்பிட்டு இருப்பார்கள்.

ஏதோ போன மாதம் அறிமுகப்படுத்தி இந்த மாதம் தடை செய்யப் பட்டதைப் போல, குழந்தைகளுக்கு கறிவேப்பிலை சாற்றைக் கொடுங்கள் கொத்துமல்லி சாற்றைக் கொடுங்கள்  என்றெல்லாம் வைத்தியம் சொல்கிறார்கள்.  எவ்வளோவோ junk foods பார்த்த நம் உடம்பு இதைப் பார்க்காதா என்ன ?

நான் நூடுல்ஸுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.     நம்ம சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவு எடுத்த பிறகு தீர்ப்பு எழுதும் குமாரசாமிக்களாகவே இருக்கிறார்கள்.   இத்தனை வருடங்களாக Maggi நூடுல்ஸ் ஆய்வில் உடல் நலனுக்கு எந்த கெடும் விளைவிக்காத அளவுக்கு மிகச் சரியாக இருந்ததா ?  அல்லது Coke, Pepsi, Lays, Kurkure இன்னும் பல junk foods உடலுக்கு மிகவும் நன்மை தரக் கூடியதா?  உண்மையான சோதனைக்கு உட்படுத்தினால் அவை Maggi நூடுல்ஸ்ஐ விட மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும்.

இப்போது Maggi நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அமிதாப் முதல் நூடுல்ஸ் செய்த ஆயா வரை எல்லோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது காவல்துறை, குளிர் பான விளம்பரங்களில் நடிக்கும் விக்ரம், விஜய், தனுஷ், இன்னும் பிறரும் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.  சீனாவில் பலாப் பழம் சாப்பிட்டு விட்டு உடனே Coke அருந்திய ஒருவர் இறந்து விட்டாராம்.   நல்ல வேளை நம்ம ஊரில் பிரியாணி Coke combinationதான் பெரும்பாலும் என்பதால் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை (இதுவரை).

Maggi நூடுல்ஸ் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இரண்டு நிமிடத்தில் உணவு என்ற concept ஐ இனி யாராலும் மாற்ற முடியாது.  இனி Maggi நூடுல்ஸுக்கு பதில் எதாவது ஸாகி நூடுல்ஸ் வரலாம். இப்போதெல்லாம் நாம் மிகவும் health conscious ஆகிவிட்டோம்.  சம்பா, வரகு, திணை, என்று எந்தப் பெயரில்  பாக்கெட் உணவு வந்தாலும் அது எவ்வளவு விலை என்றாலும் வாங்கி வாயில் (அல்லது வயிற்றில்) போட்டுக் கொள்வோம் (கொல்வோம்).

Junk Foods எதுவும் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் அது வாயை மூடிக் கொண்டு பேசவும் என்பது போல இருக்கும்.  முடிந்த வரை avoid  செய்வோம்.






Saturday, May 2, 2015

நேபாள மக்களுக்கு நமது பிரார்த்தனைகள்


ஒவ்வொரு மண்ணுக்கும் ஒருஅடிப்படை குணம் உண்டு என்று சொல்வார்கள். அப்படிப் பார்த்தால், நேபாள மக்களின் அடிப்படை குணம் பொறுமை அல்லது சாந்தம் என்று எடுத்துக் கொள்ளலாம்.  

நம் ஊரில் இருக்கும் கூர்காக்களையோ அல்லது சில ஹோட்டல்களில் வேலை செய்யும் நேபாளிகளையோ நீங்கள் கவனித்து இருக்கக் கூடும்.   நாம் திட்டினாலும் அல்லது பாராட்டினாலும் ஒரே மாதிரியான மோனாலிசா புன்னகையுடன் இருப்பார்கள்.  அப்படிப்பட்ட மக்களைப் புரட்டிப் போட்டு கதற வைத்து விட்டது இந்த நில நடுக்கம்.

எந்த இழப்பும் நமக்கு ஒரு செய்தியாகத்தான் இருக்கும், அது நம்மோடு சம்பந்தப் படாத வரையில்.  அப்படித்தான் பல செய்திகளை தினமும் கடந்து கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில்தான்  இந்த நேபாள நில நடுக்கம் எனக்குள் பல அதிர்வுகளை  ஏற்படுத்தியது.  நான் 2013 ம் வருடம் கைலாய யாத்திரை சென்ற போது சில நாட்கள் நேபாள் காத்மாண்டுவில் தங்கியிருந்தோம்.  அப்போது நாங்கள் பார்த்த பல நூற்றாண்டு கால கட்டிடங்கள் இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டது.

'காலத்தால் அழியாத' என்று சொல்லப்பட்ட பல நினைவுச் சின்னங்களை, காலம் ஒரு கணத்தில் கலைத்துப் போட்டுவிட்டது.  காலத்தால் அழியாத என்ற ஒன்று இல்லவே இல்லை என்று இயற்கை நமக்கு மீண்டும் உணர்த்திவிட்டது.  எவ்வளவு காலம் என்பதில்தான் வித்தியாசம்.

நேபாள நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடு.  அதனால்தான் நிவாரண உதவிகளில் கூட ஏகப்பட்ட சுணக்கம் மற்றும் தொய்வு.  ஆனால் நேபாள நாட்டிற்கு நமது இந்திய அரசின் உடனடி உதவிகளை நாம் கண்டிப்பாக பாராட்டலாம். பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

நெருங்கிய சொந்தங்களை இழந்த நேபாள மக்களின் வாழ்வில் மீண்டும் வசந்தம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது.   ஆனால் வேதனையின் உச்சத்தில் இருக்கும் அவர்களின் மன வலியை நம்முடைய பிரார்த்தனையும் நம்மால் முடிந்த உதவிகளும் கண்டிப்பாக குறைக்கும் என்று நம்பலாம்.

காலத்தால் அழியாத என்ற ஒன்று இல்லவே இல்லை இயற்கையில் - இந்த துயரம் உட்பட.

Saturday, April 25, 2015

ஜெ .கே - சில குறிப்புக்கள

ஒரு எழுத்தாளன் எழுதுவதை நிறுத்தி 25 ஆண்டுகளுக்குப் பிறகும் அவனுடைய மரணம் எல்லோராலும் பரவலாகப் பேசப்பட்டது திரு ஜெயகாந்தனாகத்தான் இருக்கும்.

ஜெ .கே என்று பிரியமுடன் அழைக்கப்படும் ஜெயகாந்தனின் எழுத்து எனக்கு  பரிச்சயமாக இருந்தாலும், அவரின் எழுத்து வீரியத்தையும் அவரின் குணநலன்களையும் முழுமையாக அறிந்து கொண்டது எங்கள் Discovery Book Palace சார்பில் நடத்தப்பட்ட அவரது அஞ்சலிக் கூட்டத்தில்தான்.

முகநூலில் (Facebook) பத்து வரிகளுக்கு மேல் தமிழில் ஒரு தகவல் வந்தாலே படிக்கச் சிரமப்படும் இன்றைய தலைமுறைக்கு (நான் பொதுவாச் சொன்னேன்) ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.  ஆனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த நமது சமூக சூழ்நிலையோடு ஒப்பிடும்போது, அவருடைய அக்னிப் பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற கதைகள் அந்தக் காலத்தில் எந்த அளவு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் என்று உணர முடிகிறது.

மது, கஞ்சா என்ற அவரது வாழ்க்கை முறை எனக்கு உடன்பாடில்லாதது. ஆனால் பாசாங்கு இல்லாத அவரது வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்தமானது. நாம் எல்லோரும் பெரும்பாலும் நமது செய்கைக்கு நியாயம் கற்பிப்போம். நாம் சொல்வதையும் செய்வதையும் மற்றவர்கள் அங்கிகரிக்க வேண்டும் என்று நினைப்போம்.   ஆனால் எனக்கு சரி உனக்கு தவறு என்றால் உனக்கு சரி எனக்குத் தவறாகும் என்ற அவரது சிந்தனை, அவரது எந்த செயலையும் அவர்  நியாயப் படுத்தவும் இல்லை, பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இல்லை.  உன் வாழ்கையை நீ வாழ். என் வாழ்க்கையை  நான் வாழ்கிறேன் என்ற அளவில் வாழ்ந்து சென்றவர் அவர்.

பொதுவாக இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது,  தங்களைப் ப ற்றிய  தற்பெருமையோ அல்லது மூன்றாவது மனிதரைப் பற்றிய அவதூறோ  (அல்லது கிசுகிசுப்போ) இடம் பெறுவது இப்போதெல்லாம் வாடிக்கையான ஒன்று.  ஆனால் ஜே.கே. இருந்த இடத்தில இந்த இரண்டும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.  இது நாமெல்லோரும் பின்பற்றவேண்டிய மிகச் சிறந்த பண்பாகும்.

ஜே.கே. கதைகள் மட்டும்தான் எழுதுவார் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் அவர் மிகச் சிறந்த திரைப்படப் பாடல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார் என்பது இப்போதுதான் தெரிந்தது.   அவருடைய ஒரு பாடலின் சில வரிகள் - பருவ மழை பொழியப்  பொழிய பயிர்களெல்லாம் செழிப்பாகும்.  ஆனால் பருவ மழை பொழிந்ததால் இவள் வாழ்க்கை பாலைவனம் ஆகியது என்ற வரிகளின் மூலம்  வாழ்கையில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவலத்தை மிகச் சில வரிகளில் உணர்த்திவிட்டார்.

பேச்சு என்பது காற்றில் கரைந்துவிடக் கூடியது.  எழுத்துதான் நிரந்தரமான பேச்சு.  இது ஜெயகாந்தன் சொன்னது.  அதனால்தானோ என்னவோ அவருடைய மூச்சு நின்ற பின்னும் அவரது பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இனிமேல்தான் ஜெயகாந்தனின் எழுத்துக்களை முழுமையாக படிக்க வேண்டும்.  அப்போது தேவைபட்டால் அவரது எழுத்துகளைப் பற்றி மீண்டும் எழுதுகிறேன்.






Tuesday, March 31, 2015

இன்ஸ்பெக்டர் சரவணன் பேசறேன்


2009 ம் ஆண்டு என் குடும்பத்துடன் மூணாறு சென்றிருந்த போது அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்து வந்த குரலில் சற்றுக்  கடுமை தெரிந்தது - "நான் Crime Branch இன்ஸ்பெக்டர் பேசறேன்.  நீங்கள் சென்னை வந்ததும் என்னை வந்து பார்க்கவும். உங்களிடம் enquiry செய்ய வேண்டியுள்ளது".  நான் கொஞ்சம் jerk ஆனேன்.  ஆனாலும் Crime Branch இன்ஸ்பெக்டர் நம்மை enquiry செய்யும் அளவுக்கு பெரிய மனிதன் ஆகவில்லையே.  யாரோ நண்பர்கள் கலாய்க்கிறார்கள் என்று தோன்றியது.

மறுமுனையில் தொடர்ந்த பேச்சு அதனை உறுதி செய்தது.  "என்னடா பயந்துட்டியா ? நான்தான் உன் காலேஜ் friend சரவணன் பேசறேன். எப்படிடா இருக்க ? என்றது அந்தக் குரல்.

என் நினைவலைகள் 1990 ம் ஆண்டுக்கு பின்னோக்கி ஓடியது.  நானும் சரவணனும் B.Com, M.Com என 5 வருடங்கள் ஒன்றாக  படித்தவர்கள்.  என்னுடைய கல்லூரி நண்பர்களில் முக்கியமானவன் சரவணன்.  அப்போது அவன் வீடு திருவான்மியூர் வால்மீகி நகரில் இருந்தது.  அதனால் பெரும்பாலான நாட்களில் திருவான்மியூர் கடற்கரையில் கடலை போட்டுக் கொண்டிருப்போம்.  எங்கள் நட்பின் பிணைப்பு அதிகமாகியது அந்த நாட்களில்தான். அப்போதே காவல்துறையில் அதிகாரம் மிக்க பதவியில் வரவேண்டும் என்பது அவனது இலட்சியமாக இருந்தது.  கல்லூரி வாழ்க்கை முடிந்த சில மாதங்களில் எங்கள் பயணம் வேறுவேறு பாதைகளில் செல்ல ஆரம்பித்து விட்டது.  அவன் சப்-இன்ஸ்பெக்டர் ஆகி ஏதோ ஒரு ஊரில் posting ஆனதுவரை எங்கள் தொடர்பு இருந்தது.

அதற்குப் பிறகு சுமார் 18 வருடங்கள் கழித்து இப்போதுதான் அந்தக் குரல்.  அனால் 18 வருடங்கள் கழித்து பேசினாலும் அந்தப் பழைய நட்பு மீண்டும் பச் என்று ஒட்டிக் கொண்டது.  பழைய நினைவுகளில் மூழ்கி மீண்டும் நிகழ் காலத்துக்கு வந்து பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.  நான் என்னுடைய குடும்ப விவரங்களை சொல்லிவிட்டு "குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்" என்று கேட்டேன்.  மறுமுனையில் சற்று அமைதி.  "இன்னும் இல்லைடா" என்றது அவனது குரல்.  எனக்கு தர்ம சங்கடமாக ஆகிவிட்டது.  உடனே வேறு விஷயத்திற்கு பேச்சை மாற்றி சென்னை வந்து சந்திக்கலாம் என்று பேச்சை முடித்தோம்.

பிறகு சென்னை வந்ததும் நானும் அவனும் வேறு சில கல்லூரி நண்பர்களும் சந்தித்து எங்கள் நட்பை புதிப்பித்துக் கொண்டோம்.

நானும் அவனும் அவரவர் பணியில் busy ஆக இருப்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் நாங்கள் constant தொடர்பில் இருந்தோம்.  மீண்டும் ஒரு முறை அவனிடமிருது அலைபேசி அழைப்பு.  இந்த முறை வார்த்தைகளில் ஆனந்தம் பொங்கியது.  விஷயம் இதுதான்.  நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவனுக்கு மழலை பாக்கியம் உண்டாகி இருந்தது. குழந்தை பிறந்ததும், போய்ப் பார்த்ததும், அந்தக் குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கெடுத்துக் கொண்டதும் எங்கள் நட்பின் ஆழத்தைக் கொஞ்சம் அதிகமாக்கியது.

அவனை கடந்த நவம்பர் மாதம் என் Partner Suresh உடன் சென்று காஞ்சிபுரத்தில் சந்தித்தேன்.  அங்குதான் அவன் பணியில் இருந்தான்.  குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டி இருப்பதால் சென்னைக்கு மாற இருப்பதாகச் சொன்னான்.  சென்னை வருவதற்கு அவனுக்கு விருப்பமே இல்லை.  சென்னையில் கடலில் கரைத்த பெருங்காயமாக காணமல் போய் விடுவோம் என்று சொன்னான்.

நான் காஞ்சிபுரத்தில் இருக்கும்போதே family ஐ கூட்டிகொண்டு வாடா.  இங்கிருக்கும் எல்லா கோயில்களுக்கும் எல்லோரும் ஒன்றாக போய் வரலாம் என்று சொன்னான்.  நானும் சரி என்று சொல்லி இருந்தேன்.

இரண்டு நாட்களுக்கு முன் என்னுடைய mail box இல் 'Saravanan updated his status' facebook message வந்திருந்தது.   நான் facebook அடிக்கடி பார்ப்பவன் இல்லை.  இப்படி ஏதாவது message வந்தால் மட்டுமே உள்ளே சென்று பார்ப்பேன்.

Facebook  ஓபன் செய்ததும் "This is Ramani. How are you ? என்று பூங்கொத்துடன் ஒரு message இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக scroll down செய்தேன். "Saro அண்ணா miss You",  "மாமா miss you", 'Saravanan Sir RIP" - படிக்கப் படிக்க தொண்டைக் குழியை ஏதோ ஒன்று அடைத்தது.  கண்களில் நீர் வழியத் தொடங்கியது.  என்னால் நம்ப முடியவில்லை.   என் நண்பர்கள் யாருக்கும் விஷயம் தெரியவில்லை.  எனக்கு அவன் அலைபேசி எண்னை அழைத்து உறுதி செய்வதற்கும் தைரியம் இல்லை.  இருந்தாலும் ஒரு முறை அழைத்தேன்.  Ring அடித்துக் கொண்டே இருந்ததால் கட் செய்துவிட்டேன். பிறகு என் நண்பர் Suresh மூலமாக விஷயத்தை உறுதி செய்துகொண்டேன்.  கடந்த February மாதம் heart attack ஏற்பட்டு இறந்து விட்டான் என்று.


அவன் இறந்த செய்தி கூட அவன் மூலமாகவே தெரிய வந்தது என்ன காரணத்தினால் என்று தெரியவில்லை.  Mobile, Whatsapp என்ற இந்தக் காலத்தில் கூட ஒரு நெருங்கிய நண்பனின் மரணம் ஒரு மாதம் கழித்து தெரிய வந்தது என்னை மிகவும் பாதித்தது.  யாரும் சொல்லவில்லை என்று நீயே சொல்லிவிட்டாயா  சரவணா ?


சில மாதங்களுக்கு முன்புதான் முகநூலில் ஒரு உருவகக் கதையை share செய்திருந்தாய்.  ஒருவனுக்கு 4 மனைவிகள்.  முதல் மனைவி நம் உடல். இரண்டாவது மனைவி நம் மனைவி மக்கள். மூன்றாவது மனைவி நம் சொத்து சுகம்.  நான்காவது மனைவி நம் ஆன்மா.  நாம் நம்முடைய முதல் மூன்று மனைவிகளையும் நன்றாக கவனிக்கிறோம். அவர்கள் நம் கூட வருவதில்லை.  ஆனால் நம் கூடவே வரும் நம் நான்காவது மனைவியான நம்முடைய ஆன்மாவை நாம் இருக்கும்போது நாம் கவனிப்பதே இல்லை என்று.  உன்னுடைய முடிவை நீ தெரிந்துதான் வைத்திருந்தாயோ ?

சரவணா நீ உன்னுடைய ஆன்மாவை நன்றாகத்தான் கவனித்திருக்கிறாய். உடலைத்தான் விட்டுவிட்டாய்.

2009 ம் ஆண்டு அலைபேசியில் உன் அழைப்பு வந்து நம் நட்பு புதிப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் உன்னுடைய இழப்பு என்னை இந்த அளவு பாதித்திருக்காது.

சரவணா, உன் மரணம் மீண்டும் ஒரு விஷயத்தை எனக்கு வலியுறித்துச்  சென்று இருக்கிறது.  ஆறுதலான வார்த்தைகளையும் அன்பான புன்னகையையும் அடுத்த வேளைக்கு தள்ளி வைத்துவிடாதே என்று.

Saturday, March 14, 2015

தேவை - கவனம்


நான் சமீபத்தில் Osho Tamil என்ற முகநூல் வலைதளத்தில் படித்ததில் பிடித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க ஓஷோ சொல்லும் வழிமுறை :-

அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.
ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.
''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.
உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன...பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!''என்றார் ஓஷோ.
'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!
''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.
ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

இதைப் படித்ததும் என் நண்பன் மகேஷ் தன்னுடைய சிறு வயதில் ஏற்பட்ட நாய்க்கடி அனுபவத்தை சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.  அவன் (இப்போது அவராகி விட்டார். சிறு வயது என்பதால் அவன் என்றே குறிப்பிடலாம்) சின்னப் பையனாக இருந்த போது ஒரு நாய் அவனைக் கடித்துவிட்டது.  

என்னடா செய்தாய் நாயை என்று கேட்டேன்.    

ஒன்றுமில்லை. அந்த நாய் என்னைப் பார்த்து பல்லை இளித்து சிரித்தது. அதனால் கிட்டே போய் நானும் சிரித்தேன். கடித்த பிறகுதான் தெரிந்தது அது சிரிக்கவில்லை. என்னைப் பார்த்து முறைத்தது என்றான்.

யோசித்துப் பார்த்தால் சின்ன வயதில் அவனுக்கு நாயுடன் ஏற்பட்ட அனுபவம் வயதான பிறகும் நமக்கு பல மனிதர்களுடன் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அடுத்தவர் முறைப்பது  தெரியாமல் சிரிக்கிறார் என்று நினைத்து நெருங்கி கடி வாங்கி வந்து விடுகிறோம்.
  
ஓஷோ சொன்னது போல முடிந்தவரை எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க முயலுவோம்.