Thursday, December 31, 2015

நல்ல காலம் பொறக்குது


மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதில் குடுகுடுப்பைக்காரன் குரலைக் கேட்டது பழங்கனவாகி விட்டது.  சிறு வயதில் அவனது குரலும் உருவமும் சற்று அச்சமூட்டுபவையாக இருந்தாலும், இப்போது யோசித்துப் பார்த்தால் அவன் பொதுவாக நம்பிக்கை ஊட்டுபவனாகத்தான் இருந்திருக்கிறான். ஏனென்றால் அவனை நினைத்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது" என்ற வாக்கியங்கள்தான்.

பாரதியாருக்கும் அவனைப் பிடித்திருக்கிறது போல் இருக்கிறது. அதனால்தான் புதிய கோணங்கி என்ற தலைப்பில் குறி சொல்லி இருக்கிறான் (அவனது முண்டாசும், மீசையும்கூட ஓரளவு  குடுகுடுப்பைக்காரனைத்தான் நினைவு படுத்துகிறது).

குடுகுடுப்பைக்காரன் வாயில் இருந்து வரும் நல்ல வார்த்தைகள் எப்படி நம் மனதுக்கு நம்பிக்கை அளிக்கிறதோ அதேபோல அவன் தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற பயமும் இருக்கும்.  பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போதும் அந்த உணர்வுதான்  வருகிறது.

அதனால்தான் "தரித்திரம் போகுது; செல்வம் வருகுது; படிப்பு வளருது; பாவம் தொலையுது" என்று அவன் சொல்லும்போது நம்பிக்கையாக இருந்தாலும், "படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்" என்று சொல்லும்போது "ஐயோ நாமும் படித்திருக்கிறோமே, ஏதாவது தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருக்கிறோமா அல்லது செய்துவிடுவோமோ" என்று  மனம் பதைபதைக்கிறது.  ஏனென்றால் சூது அல்லது பாவம் என்பதின் முழுமையான   விளக்கமே நமக்கு சரியாகப் புரிவதில்லை.  இதற்கும் பாரதியே நமக்கு வழி காட்டுகிறான்.  அவன் சொல்கிறான் -

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயாய்  ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தருமமென யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால். 

"தருமமென யான் குறிப்பதிலும்", இந்த வார்த்தைகளுக்கு நான் கொண்ட பொருள் நம்முடைய மனசாட்சிப்படி நடப்பதுதான்.   மற்றது எது குறித்தும் கவலை கொள்ளத் தேவை இல்லை. சூது வாது அல்லது பாபம் எதுவும் இல்லாமல் அது பார்த்துக் கொள்ளும் (சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லியவண்ணம் செயல் - அதனால் என்ன கஷ்டம் என்பதற்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறோமா என்ன ? - முடிந்தவரை மனசாட்சியின்படி வாழ்ந்துதான் பார்ப்போமே).

2015-ன் துன்ப நினைவுகளை 2015-லேயே விட்டுவிட்டு, சந்தோஷ நினைவுகளை மட்டும் 2016-ம் ஆண்டுக்கு கொண்டு சென்று அதை மேலும் பல மடங்கு பெருக்குவோம்.

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  Again  எனக்குப் பிடித்த பாரதியின் கவிதையுடனேயே முடிக்கிறேன் (அவர்  சென்றதினி மீளாது மூடரே என்று சொன்னார், நான் நண்பரே என்று சொல்லி இருக்கிறேன். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. எனக்கு இல்லை).

சென்றதினி மீளாது, நண்பரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

புதிய கோணங்கி

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரந் தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்.

வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது,

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!
அந்திரி,வீரி,சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு.

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பயந் தொலையுது,பாவந் தொலையுது,
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தௌயுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடீ சக்தி,மலையாள பகவதீ!
தர்மம் பெருகுத,தர்மம் பெருகுது


Friday, December 25, 2015

பிரளயம்


இயற்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவுமே எப்போதோ எங்கோ நடைபெற்ற சம்பவம்தான்.  நமக்குத்தான் புதிது.  வரலாறு காணாத மழை என்று நாம் சொன்ன மழையும் வரலாறு கண்டதுதான்.  நமக்கு வரலாற்றுக் குறிப்புக்கள் இல்லை  அவ்வளவுதான்.

நேற்று ஜெயகாந்தனின்  பிரளயம் என்ற குறுநாவலை படித்தேன்.  1965-ல் வெளிவந்த இந்தக்  கதையும் சென்னையின் வெள்ளம் பற்றியதுதான்.  50 வருடங்களுக்குப் பிறகும் அதே வெள்ளம், மக்கள் மழைக்கு பள்ளிக்கு ஒதுங்குதல், உணவுப் பொட்டலங்கள் மற்றும் பிற அவதிகள்.  இந்த வெள்ளத்தின் நடுவில் கதை செல்கிறது. கதையின் நடுவில் அவரின் சில வரிகள்: 

"சென்னை நகரின் பல பகுதியிலுள்ள சேரிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல பிரதான ரஸ்தாக்களில் கூட மரங்கள் வீழ்ந்தும், முழங்காலுக்கு மேல் ஆறாக மழை நீர் பாய்ந்தும் போக்குவரத்துக்கள் ஸ்தம்பித்து இருந்தன.  தினசரிப் பத்திரிகைகள் எல்லாம் அந்தக் காட்சியைப் படம் பிடித்துப் போட்டுப் பிரசுரித்தும், பேய் மழை என்று தலைப்பிட்டும், புயல் உருவாகி வருகிறது என்று எச்சரித்தும் மழையால் விளைந்த நாசங்கள் குறித்துச் செய்திகள் வெளியிட்டன.  இவை எல்லாவற்றுக்கும் சிகரம்போல் உதவிக்கு ஓடோடி வரும் நகரப் பிரமுகர்களின் வள்ளண்மையைக் குறித்து அவை புகழ் பாடின. பள்ளிகளுக்குக் குடியேறியுள்ள சேரிவாசிகளுக்கு சில பெரிய மனிதர்கள் ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தார்கள்"

"எப்படியோ கஷ்டப்பட்டு, மானத்தோடு கஞ்சி குடித்து நேற்றுவரை வாழ்ந்திருந்த இவர்கள், இன்று மழையின் காரணமாக வீடிழந்து நிற்கிறார்கள்.... எதன் காரணமாக இப்போது   மானத்தை இழந்தனர் ?..."

2015-ல் நாம் கண்ட இந்த வெள்ளத்துக்கும், அந்த வெள்ளத்துக்கும் உள்ள முக்கிய வித்தியாசம். 1965 கதையில் வந்த வெள்ளம் அடித்தட்டு மக்களை மட்டும் பாதித்தது. இந்த வெள்ளம் அடித்தட்டு, நடுத்தட்டு, மேல்தட்டு என்று எல்லா தட்டு மக்களையும் ஒரு தட்டு தட்டி விட்டது (வேட்டியை மடித்து பல பேரை சினிமாவில் புரட்டிய ராஜ்கிரண் கழுத்தளவு வெள்ளத்தில் புரண்டு பரிதாபமாக படகில் காப்பாற்றப் பட்டது முதல் கோடிகளின் அதிபர் அஸ்வின் முத்தையா லுங்கியோடு படகில் சென்றது வரை - மழை எல்லோரையும் சமப்படுத்திவிட்டது).

இந்த மழையினால் விளைந்த மனித நேயத்தைப் பற்றி எல்லோரும் பேசியாகிவிட்டது.  நம்மில் பலர் சில ஆயிரம் அல்லது சில இலட்சம் ரூபாய் கொடுத்தது முதல், உணவு, உடை, உறைவிடம் வழங்கியது முதல் பல உதவிகளை செய்திருக்கலாம்.  நாம் எவ்வளவு கொடுத்தாலும் அது  வாழ்க்கையில் நாம் பெறுவதைக் காட்டிலும் குறைவுதான். ஆனால் உண்மையில் அதிகம் கொடுத்தவர்கள் என்று சிலரை மழை அடையாளம் காட்டி இருக்கிறது.

சென்னையின் பல பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய பலரைக் காப்பாற்றி தன்னுடைய இன்னுயிரை இழந்த பல இளைஞர்கள் இருக்கிறார்கள். பெயர் தெரிந்தவர் சிலர், பெயர் தெரியாதவர் பலர். 

நாட்டைக் காப்பாற்ற தன்னுடைய உயிரைத்  தியாகம் செய்யும் வீரர்களை அரசாங்கம் கௌரவித்து அவர்களின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்கிறது. 

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் போராட்டத்தில் தன்னுடைய உயிரை இழந்த இந்த இளைஞர்களும் அத்தகைய வீரர்கள்தான். இந்த விஷயத்தில் அரசாங்கம் எந்த அரசியலும் பார்க்காமல் அவர்களை கௌரவித்தால் அது நமக்குப் பெருமை.  இதைப் பற்றி யாரேனும் ஏற்கனேவே பதிவு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. 

ஜெயகாந்தன் பிரளயம் கதையை இப்படி முடித்திருந்தார்.

"ஒரு பிரளயமே வந்து இந்த உலகை அழித்தாலும் அது மீண்டும் புதிதாய்ப் பிறக்கும்.  கேவலம் இந்த மழையா வந்து மனிதர்களின் வாழ்வுக்கு முடிவு கட்டிவிடும்".


Saturday, December 5, 2015

இதுவும் கடந்து போகும்


Nightmare என்று சொல்வார்கள். அதற்கு சரியான பொருள் தமிழில் என்னவென்று இனிமேல் தேட வேண்டாம். "2015 சென்னை மழை" என்று சொன்னால் போதும்.   போன மழையோடு ஆபத்து நீங்கியது என்று நினைத்து இருந்தவர்களுக்கு மீண்டும் சென்ற செவ்வாய் கிழமையில்  (1-12-2015) இருந்து பெய்ய ஆரம்பித்த மழை சென்னையை முழுவதுமாக புரட்டிப் போட்டுவிட்டது.

ஏற்கனவே சென்ற மழையின் traffic jam -இல்  மாட்டிய அனுபவம் இருந்ததால் செவ்வாய் கிழமை பெய்ய ஆரம்பித்த மழையின் வீரியத்தைப் பார்த்து மதியமே அலுவலகத்துக்கு leave declare செய்து விட்டு எல்லோரையும் வீட்டுக்கு கிளம்ப சொல்லி விட்டோம்.

மாலை நேரம் செல்லச் செல்ல மழை வெளுத்து வாங்கியதும் அடுத்து வரும் நாட்கள் எப்போதும் போல இருக்கப் போவதில்லை என்று உள்மனது சொல்லியது.  அதற்கேற்றார்போல அடுத்த சில நிமிடங்களில் power cut ஆகிவிட்டது.   Peak hour traffic-ன் நெரிசலுக்கும் இரைச்சலுக்கும் பழகிப் போயிருந்த எங்கள் தெருவுக்கும், காதுகளுக்கும் அந்த இருட்டும் மழையின் சத்தமும் ஒரு அமானுஷ்ய சூழ்நிழையை  உருவாக்கி இருந்தது. இப்போதும் மழை கொட்டிக் கொண்டுதான் இருந்தது.  எந்த நேரத்தில் என்னுடைய முந்தைய "மாமழை போற்றுதும்" என்ற பதிவை செய்தேனோ தெரியவில்லை, உண்மையிலேயே மாமழை கொட்டிக் கொண்டிருந்தது.

நான் என் நண்பர்களுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். அதன் சாராம்சம் இதுதான் "இந்த மழை இயற்கையின் முன்  நாம் ஒன்றுமேயில்லை என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது.  நம் பாதுகாப்பை அந்த இயற்கையின்  பேராற்றலிடமே விட்டு விட்டு நாம் அனைவரும் நமக்காக பிரார்த்தனை செய்வோம்" என்பதுதான். 

வீட்டில் invertor இருந்ததால் மின் தடை பாதிப்பு அதிகம் தெரியவில்லை.  நீண்ட நாட்களுக்குப் பிறகு டிவியில்  யாரோ பேசுவதைக் கேட்டுக் கொண்டு சாப்பிடாமல் எங்கள் பேச்சை  நாங்களே கேட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

வெளியில் எட்டிப் பாத்தால் மழை இன்னும் வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.  Torch அடித்துப் பார்த்த போது தெருவில் கணுக்காலை நனைத்தபடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது.  எங்கள் தெருவில் எப்போதும் தண்ணீர் தேங்காது. மழை விட்ட சில நிமிடங்களில் தெரு பளிச்சென்று ஆகிவிடும். அப்படியே இன்றும் ஆகிவிடும் என்று நினைத்து கதவை மூடி அன்று  கொஞ்சம்  சீக்கிரமே படுத்துவிட்டோம்.  பொதுவாக படுத்தவுடன் தூங்கிவிடும் எனக்கு அன்று mind மிகவும்  disturb ஆகவே இருந்தது.

நள்ளிரவுக்கு மேல் வெளியில் அக்கம் பக்கத்துக்கு மனிதர்களின் பேச்சுக் குரல் கேட்டு வெளியில் எட்டிப் பார்த்தேன். தண்ணீர் ஆறாக பெருகி ஓடிக் கொண்டிருந்தது.  எங்கள் தெருவில் இப்படி ஒரு காட்சியை இதுவரை கண்டதில்லை.  எங்கள் Flat -ன் 2-வது மாடியில் இருந்து கீழே வந்து பார்த்தேன். மாலையில் கணுக்காலை நனைத்த தண்ணீர்   இப்போது parking area-வில் ஏறி காரின் டயர்களை நனைக்கத் தொடங்கி இருந்தது.  எங்கள் ground floor-க்கு  இன்னும் இரண்டு  படிகள்தான் பாக்கி.  

எங்கள் பகுதி அமைந்திருக்கும் சூளைமேடு area வில் வெள்ளம் வந்தால் சென்னையின் (தென் சென்னை) பெரும்பாலான பகுதிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று அர்த்தம்.  ஏரிகளை திறந்து விட்டார்கள் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. எனக்கு உடனே Tambaram Mudichur போன்ற பகுதிகளின் நிலைமையை நினைத்துதான் கொஞ்சம் concern-ஆக இருந்தது.

மீதி இரவை படுப்பதும் எட்டிப் பார்ப்பதுமாக கழித்தேன்.  காலை மீண்டும் ஒரு சோதனை.  எங்கள் நெருங்கிய உறவினரின் மரணச் செய்தி.  வெளியே இப்போது இடுப்பளவு தண்ணீர்.  நாங்கள் செல்ல வேண்டிய இடமோ மாதவரம். காரை வெளியில் எடுக்க முடியாது .  எந்த cab க்கு phone செய்தாலும் not reachable. பிள்ளைகளை அழைத்து செல்லவும் முடியாது. தனியே  விட்டுச் செல்லவும் பயம்.  கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு நானும் என் மனைவியும் இடுப்பளவு தண்ணீரில் வெளியே வந்து மெயின் ரோட்டுக்கு வந்து எப்படியோ மாதவரம் சென்று safe ஆக திரும்பி விட்டோம்.  

நல்ல வேளை செவ்வாய் கிழமை இரவுக்குப்  பிறகு  அவ்வளவு மழை இல்லை. அந்த மழை மீண்டும் ஒரு நாள் தொடர்ந்திருந்தால் ..... சென்னை என்னவாக  ஆகி  இருக்கும்  என்பதை  உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இப்போது அரசாங்கத்தையோ அல்லது யாரையுமோ குறை சொல்லி புண்ணியம் இல்லை.   இயற்கையின் பேராற்றலுக்கு முன் நாம் ஒரு தூசுக்கு கூட சமம் இல்லை என்பதை மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறது இந்த மழை.  அதே சமயம் நாம் தனி மனிதராகவோ அல்லது அரசாங்கமாகவோ செய்யும் தவறுகள்தான் இயற்கையால் ஏற்படும் ஆபத்தினை பேராபத்தாக ஆக்கி விடுகிறது.

இயற்கை இன்னமும் நம் மீது கருணையோடு இருப்பதால்தான் இந்த அளவோடு நிறுத்தி இருக்கிறது.   இயற்கையை வணங்கி இயற்கையோடு இணைந்து தன்னுடைய வாழ்வை நடத்திய  நம்முடைய முப்பாட்டனின் அறிவு, படித்த நமக்கும் வந்தால் நன்றாக இருக்கும். 

பீனிக்ஸ் பறவை நெருப்பில் இருந்து உயிர்தெழுமாம். சென்னை நகர மக்களும் அப்படிதான். 



Tuesday, November 17, 2015

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்


கடந்த வாரம் வரை வெயிலில் வெண்ணையாக உருகிக் கொண்டிருந்த சென்னை திடீரென்று நடுக்கடலில் கப்பலை இறங்கித்  தள்ள முடியுமா என்று சோக கீதம் பாட ஆரம்பித்து விட்டது.  Thanks to the unprecedented rain.

ஆனால் இடுக்கண் வரும்போதும் நகும் நக்கல் நம் மக்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு.  அதனால்தான் தண்ணீர் இல்லாதபோது கழுதைக்கு கல்யாணம் பண்ணி வைத்தவர்கள் இப்போது மழையை நிறுத்த அந்த கழுதையை தேடிக் கொண்டிருக்கிறார்கள் - divorce செய்து வைக்க.

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுவாய் இயற்கை அன்னை மடை திறந்த வெள்ளம் போல மழையை நமக்கு கொடுத்தும் நாம் ஓட்டை குடங்களை வைத்துக் கொண்டிருந்தால் கோடைக் காலத்தில் காலி குடங்களைத்தான் வைத்துக் கொண்டு தண்ணீருக்கு அலைந்து கொண்டிருப்போம்.

There is enough available for everyone's need, but there is never available for anyone's greed என்று சொல்வார்கள். ஒவ்வொரு கோடைக் காலத்திலும் நாம் தண்ணீருக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்று அண்டை மாநிலங்களுடன் மல்லுக் கட்ட வேண்டிய தேவையே இல்லை - ஒழுங்காக மழை பெய்யும் போதே சேமித்து வைத்தால்.

நுங்கம்பாக்கம் lake view ரோடு இருக்கிறது.  Lake எங்கே ?
மொகப்பேர் ஏரி Scheme இருக்கிறது.  ஏரி எங்கே ?

இப்படி சென்னையிலும் சென்னையை சுற்றியும் உள்ள நூற்றுக் கணக்கான ஏரிகளையும் குளங்களையும் தூர்த்து பிளாட் போட்டு விட்டால் (விற்றால்) மழைக்கு தண்ணீர் வராமல் தயிரா வரும் (கோபத்தில் வேறு வார்த்தை வந்தது.  ஆனால் நாகரீகம் கருதி சொல்லவில்லை).

அரசாங்கத்தை Jaya டிவி யைத் தவிர எல்லோரும் திட்டித் தீர்த்தாகி விட்டது. அரசாங்கத்தை மட்டுமே குறை சொல்வதால் நம் கோபம் கொஞ்சம் குறையலாம்.  அவ்வளவுதான். இந்த அரசாங்கம் மட்டும் அல்ல எந்த அரசாங்கமும் தும்பை விட்டு விட்டு வாலைத் தான் பிடித்துக் கொண்டிருகிறது.  மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.  அல்லது மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி.

நாம் மட்டும் என்ன செய்கிறோம்.  அண்ணாந்து பார்த்து காரி உமிழ்வது போல plastic குப்பைகளை கண்ட இடத்திலும் வீசி எறிகிறோம்.  மழைக் காலத்தில் தண்ணீர் வேகமாக வெளியேற முடியாமல் அடைத்துக் கொண்டு நம் மீதே துப்புகிறது.

சில விஷயங்களை அரசாங்கம்தான் செய்ய முடியும்.  ஏரி மராமத்து, அணையை பலப்படுத்துதல், புதிய நீர்நிலையை உருவாக்குதல் அல்லது இருக்கும் நீர் நிலையை ஒழுங்காக பராமரித்தல், இவை எல்லாம் அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும்.  

அதே நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடிய சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக செய்தாலே நமக்கு ஏற்படும் பாதிப்பை பெருமளவு குறைக்க முடியும்.  நம் வீட்டில் மழை நீர் சேகரிப்புத் திட்டம், குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் இருத்தல், வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க முடியாவிட்டாலும் ஒரு செடியாவது வளர்த்தல், இப்படி ஒவ்வொருவரும் செய்யக் கூடிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. 

இப்போது சில நாட்களுக்கு கஷ்டப்பட்டாலும் இரண்டு வருடங்களுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு வந்து விட்டதால் கண்டிப்பாக இந்த மாமழையை போற்றுவோம்.

Thursday, November 12, 2015

லா.ச.ரா.


கடந்த வாரம் எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் (சுருக்கமாக லா.ச.ரா.) அவர்களின் நூற்றாண்டு விழா ஆழ்வார்பேட்டை Russian Cultural மையத்தில் நடைபெற்றது. Discovery Book Palace-ம் வேறு சிலரும் இணைந்து இந்த விழாவை நடத்தினார்கள்.

லா.ச.ரா.வின் "சிந்தா நதி"  என்ற புத்தகத்தை என் கல்லூரி நாட்களில் படித்த போது எனக்கு பெரிதாக ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பெரிய எழுத்தாளர்களின் புத்தகத்தைப் படித்தால்தான் நம்மை 'அறிவு ஜீவி' வட்டத்துக்குள் சேர்ப்பார்கள் என்ற எண்ணத்தில் (தவறான என்று சேர்த்துக் கொள்ளவும்) படித்தேன்.  படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது அல்லது இல்லை - இந்த இரண்டுமே உண்மைதான் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டேன்.

அவருடைய எழுத்துக்கள் புரியவில்லை என்பது குறித்த என்னுடைய புரிதல் சரியானதுதான் என்று அந்த விழாவில் எனக்குப் புரிந்தது (உங்களுக்கு என் எழுத்துக்கள் புரிந்ததா ?).  லா.ச.ரா.- தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்ற தலைப்பில் அவருடை மகன் சப்தரிஷி தொகுத்த நூலில் லா.ச.ரா.வே இப்படி குறிப்பிடுகிறார் "என்னுடைய எழுத்துக்கள் புரியவில்லை என்று சொல்கிறார்கள்.  இன்று புரியாவிட்டால் என்ன நாளை புரிகிறது. நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள். அட அப்படியே புரியாவிட்டால் என்ன ? எழுதுபவனுக்கே சில நேரங்களில் புரிவது இல்லை".

இதை மேம்போக்காக படிக்கும் போது சாதாரணமாகத் தெரிகிறது.  ஆனால் அதில் ஒரு ஆழ்ந்த உண்மை எனக்குப் புரிந்தது.  நாம் எந்த மன நிலையில் இருந்து ஒன்றை சொல்கிறோமோ அல்லது செய்கிறோமோ அந்த எண்ண அலையின் நேர்கோட்டில் இருப்பவர்களால்தான் நாம் சொல்வதை அல்லது செய்வதை சரியானபடி புரிந்து கொள்ள முடியும்.

சித்தர்கள் சொன்ன பல விஷயங்கள் நமக்கு புரியாததின் காரணம் இதுதான். இன்று புரியாவிட்டால் என்ன நாளை புரிகிறது என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளை வேண்டியதுதான்.

லா.ச.ரா.என்ற எழுத்தாளர் கொஞ்சம் கடினமானவராக இருக்கலாம்.   ஆனால் அவர் மிகவும் எளிய மனிதராக வாழ்ந்தவர்  என்று அந்த விழாவில் பலரும் பேசியதில் இருந்து தெரியவந்தது.

அவர் சொல்கிறார் "நாம் யாரும் கெட்டவர்கள் இல்லை.  ஆனால் நமக்கு கெட்ட எண்ணங்கள் தோன்றாமல் இருக்கிறதா என்ன ?"  அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதுதானே வாழ்க்கை.  பொதுவாக மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைக்கும் அல்லது வெளிப்படுத்த தயங்கும் எண்ணங்களை தன்னுடைய கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்துவதில் திறமையானவர் லா.ச.ரா.

எழுத்தாளர் சாரு நிவேதிதா. திருப்பூர் கிருஷ்ணன் மற்றும் பலர் பேசினாலும். 90 வயதினை கடந்த லா.ச.ரா-வின் மனைவி ஹைமவதி அவர்களின் பேச்சு மிகவும் இயல்பாக இருந்தது.  நடையில் தள்ளாட்டம் இருந்தாலும் பேச்சில் தெளிவு இருந்தது.  அவர் சொன்னார் "என் கணவர் எழுதுவதை main ஆகவும் வைத்துக் கொள்ளவில்லை side  ஆகவும் வைத்துக் கொள்ளவில்லை. இயல்பாக தோன்றும்போது எழுதினார்.  சில கதைகளை எழுத அவர் வருடக் கணக்கில் எடுத்துக் கொண்டார்.  அவருடைய கதைகளுக்கு அவர் ஒரு கருவியாகத்தான் தன்னை நினைத்துக் கொண்டார்.

அவருடைய எழுத்தில் கனம் அதிகம். எழுத்தில் கனம் இருந்தும் அதை தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர் லா.ச.ரா.  

அவருடைய அபிதா என்ற நாவலில் இருந்து ஒரு sample :

"புது இடத்தைக் காணும் வியப்பைக் காட்டிலும் பழைய இடம், பழகின இடம் திரும்பும் உள்ளக் கிளர்ச்சி தாங்க முடியவில்லை.  தேங்கிவிட்ட நினைவுகள் கொந்தளிப்பு கண்டு உணர்சிகள் ஒருங்கே அழுத்தும் நிலை முற்றிலும் இன்பம் என்று  சொல்வதற்கில்லை.  திரும்பியே வந்திருக்க வேண்டாமோ ? என்று கூட சித்தம் சலிக்கிறது.  ஆயினும் ஒரு எண்ணம். ஒரே எண்ணம் - நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருக்கிறது ஒரு பொறி. நினைவின் காற்றுவாக்கில் பற்றிக் கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னைத்  தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது.  நானும் பற்றி எரிகிறேன்.  ஒன்று கண்டேன்.  எதுவுமே மறப்பதற்கில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே".


Thursday, October 22, 2015

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் ....

என்னுடைய Blog-இல் இது 50-வது பதிவு. இன்று விஜயதசமி என்பதால் 50-வது பதிவை இன்றே எழுதி விடலாம் என்று முடிவெடுத்தேன். 


உண்மையில் சொல்வதென்றால் blog எழுதுவதை விளையாட்டாகத்தான் ஆரம்பித்தேன்.  ஆனால் விளையாட்டு வினையாகிவிட்டது (வினை என்பதை செயல் என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளவும்).  


இந்த நேரத்தில் இருவரை நான் நினைத்துக் கொள்ளவேண்டும்.  ஒன்று என் மகன் கோகுல். அவன்தான் ஒருமுறை சொன்னான். "அப்பா நீங்கள் இவ்வளவு புத்தகங்களை படிக்கிறீங்களே.  ஏன் உங்கள் புத்தகம் ஒன்று கூட இல்லை". வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத சிறுவனாக இருந்தாலும், தந்தைக்கு உபதேசித்த மந்திரமாக அந்த வார்த்தைகள் எனக்குப் பட்டது. அப்போதுதான் என்னுடைய எண்ணங்களை ஏதோ ஒரு வகையில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

இரண்டாவது, நண்பர் மோகன்குமார். Blog-ல் எழுதுவது குறித்த சில அடிப்படை விஷயங்களை ஆரம்பத்தில் சொன்னது அவர்தான். .   


எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் Discovery Book Palace திரு வேதியப்பன் மூலமாக எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்.  ஒருமுறை பேசும் போது அவர் சொன்னது. எழுத்தாளன் என்பவன் லட்சக் கணக்கான வாசகர்களை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.  சில நூறு பேராவது உங்கள் எழுத்தை விரும்பினால், உங்கள் எழுத்துக்கள் அவர்களை எதோ ஒருவகையில் பாதித்தால் நீங்களும் ஒரு எழுத்தாளர்தான் என்று.  


என்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் என் நண்பர்கள் என்னுடைய எழுத்து நடை நன்றாக இருப்பதாக சொன்னபோது ஒரு திருப்தி இருந்தாலும் அவர்களுக்கு என்னைப் பிடிக்கும், அதனால் என்னுடைய எழுத்தைப் பிடித்திருகிறது என்ற அளவில்தான் அவர்களுடைய feedback-ஐ எடுத்துக் கொண்டேன்.


ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாத பல நண்பர்களும் என்னுடைய பதிவுகளைப் பாராட்டிய போது, ஓகே நானும் rowdy தான் என்று காலரைத்  தூக்கிவிட்டுக் கொண்டேன். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும். நான் செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம் என்பது. அதனால் என்ன இது ஓடிக் கடக்கும் ஓட்டப்பந்தயமா என்ன ? என்னுடைய கால் தடங்களை அழுத்தமாக பதித்து மெதுவாகவே செல்ல விரும்புகிறேன்.  எவ்வளவு அதிகம் எழுதுகிறேன் என்பதில் என் கவனம் இல்லை. எவ்வளவு அழுத்தமாக எழுதுகிறேன் என்பதில்தான்  என் கவனம் எல்லாம். 

என்னுடைய பதிவுகளின் நோக்கம் "இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்" என்பதல்ல.  பொருளாதாரத் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்  இந்த அவசர வாழ்வில், காலையில் செய்த தவற்றை நினைத்து மாலையில் மனம் வருந்தி மீண்டும் மறு நாள் காலையில் அதே தவற்றைச் செய்யும் நம்முடைய சராசரி மனித வாழ்வில் எப்படியாவது ஒரு படி மேலே வர வேண்டும் என்ற நம்முடைய இடையறாத போராட்டத்தில் கிடைக்கும் சில அனுபவங்களை குறித்து வைத்துக் கொள்ளும் ஒரு டைரிக் குறிப்பாகத்தான் இதை நினைத்துக் கொள்கிறேன்.  அதற்காக மாதத்தில் சில மணி நேரங்களை செலவிடுவது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. 

சுற்றமும் நட்பும் சூழ இருப்பது ஒரு காலம்.  சுற்றமும் நட்பும் சூழ இருந்த நாட்களை நினைத்துக் கொண்டு தனிமையில் இருப்பது ஒரு காலம்.  எல்லாக் காலங்களிலும் யாரையாவது நாம் காயப் படுத்திக் கொண்டோ அல்லது யாராலோ நாம் காயம் அடைந்து கொண்டோ தான் இருக்கிறோம்.

எந்தக் காலமாக இருந்தாலும் யாரையும் காயப்படுத்தாமலும் யாராலும் காயப்படமாலும் நம்மால் சந்தோஷமாக வாழ முடிந்தால் நாம் வாழ்கையில் வென்று விட்டோம் என்று அர்த்தம்.  அந்த அர்த்தத்திற்கு இந்த டைரிக் குறிப்புக்கள் உதவும் என்று நம்புகிறேன்.  

ரமண மகரிஷி சொல்வது போல் "பிறர்க்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்". அந்த வகையில் இந்தப் பதிவுகள் பிறருக்கு என்று சொல்வதை விட முதலில் எனக்கு. 

நம்மால் முடியும் போதே நமக்குப் பிடித்த சில நல்ல விஷயங்களை செய்து விட வேண்டும். பிறகு முடியாத போது அப்போதே செய்திருக்கலாமே என்று புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை.

பெரியாழ்வார் திருமொழியில் ரங்கநாதனை நினைத்துச் சொல்கிறார். எனக்கு மூப்பு வந்து நான் நலியும் போது உன்னை நினைக்க முடியுமா என்று தெரியவில்லை.  அதனால் இப்போது நான் நன்றாக இருக்கும்போது உன் நாமத்தைச் சொல்லி விடுகிறேன்.  இப்போது நான் சொல்வதையே என்னுடைய கடைசிக் காலத்தில் சொல்வதாக நினைத்து என்னை கரையேற்றுவயாக என்று, அந்தப் பாடல் இதுதான்.

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் 
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன் 

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே

என்னுடைய பதிவுகளும் கிட்டத்தட்ட அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் category தான்.

இந்த 50-வது பதிவை எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் கவிதையோடு முடிக்கிறேன் (கண்டிப்பாக இதற்கு translation தேவை இல்லை என்று நினைக்கிறன்).

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

Saturday, October 17, 2015

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் ....


கூடவே இருந்தாலும் சில விசயங்களை நமக்கு பிடிப்பதில்லை (ஒரு வேளை  கூடவே இருப்பதால்தானோ  என்னவோ).  அப்படி ஒரு பாவப்பட்ட ஜன்மம் நம் வீட்டில் இருக்கும் பல்லி. (நீங்கள் உங்கள் கணவர் அல்லது மனைவி அல்லது வேறு ஏதாவது உறவை நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

நம் வீட்டு பெண்கள் பல்லிக்கும் கரப்பானுக்கும் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.  ஒரு வேளை அவர்கள் அப்படி பயப்படுவதால்தான் ஆண்கள் பயப்படாமல் இருக்கிறோமோ (அல்லது பயப்படாமல் இருப்பது போல் இருக்கிறோமா)  என்றும்  தெரியவில்லை.

எங்கள் வீட்டு சமையல் அறையில் கடந்த சில நாட்களாக ஒரு சிறிய பல்லி சுற்றிக் கொண்டு இருந்தது. அதை வெளியேற்றச் சொல்லி  என் மனைவி இரண்டு நாட்களாக சொல்லியும். கொஞ்சம் பொறு அதுவாக போய் விடும் என்று சால்ஜாப்பு (சமாதானம்) சொல்லிக் கொண்டிரேந்தேன்.  ஆனால் அது போன மாதிரியாகத் தெரியவில்லை.

கடைசியாக அதை வெளியே விரட்டி விடுவது என்று முடிவெடுத்தேன். என்னுடைய  plan ஒரு துணியை அதன் மேல் போட்டு அப்படியே அலேக்காக தூக்கிச் சென்று வெளியில் விட்டு விடுவது.  அதன்படி ஒரு துணியை கையில் வைத்துக் கொண்டு அதன் அருகில் சென்றேன்.  என்னைப் பார்த்ததும் அந்த பல்லி தன தலையை மெல்லத் தூக்கி நாக்கைத் துருத்தி பாகுபலி வில்லன் போல ஜிப்ரிஷ் மொழியில் ஏதோ சொல்லியது.  அதை நானாகப் புரிந்து கொண்டது "என்னை வெளியில் தூக்கிப் போடுவதற்கு உனக்கு ஏன் இவ்வளவு நடுக்கம் ?"  ஒருவேளை என்னுடைய body vibration ஐ (உடல் அதிர்வுகள் - நடுக்கம் என்று தவறாகவோ அல்லது சரியாகவோ? புரிந்து கொள்ள வேண்டாம்) வைத்து அப்படி சொல்லியிருக்கக் கூடும் என்று நானாக புரிந்து கொண்டேன்.  என்னுடைய பயம் எல்லாம் பல்லியை விரட்டுகிறேன் பேர்வழி என்று சொல்லி அதற்கு குந்தகம் விளைவித்துவிடக் கூடாது என்பதுதான்

அதனால் பல்லி  என்ன நினைத்தது என்று கவலைப் படாமல் நான் வைத்திருந்த துணியை அதன் மேல் சார்த்தினேன் (போட்டேன் என்று சொன்னால் அது மிகவும் harsh ஆக இருக்கும்).  ஒரு இந்தியனாக என்னுடைய planning நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதே இந்தியனாக execution-ல் கோட்டை விட்டு விட்டேன்.  அந்த பல்லி துணியின் நடுவில் இருந்த சின்ன cycle gap ல் வெளிய வந்து விட்டது. வெளியில் வந்து என்னைப் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தது (அல்லது சிரிப்பது போல எனக்குப் பட்டது).

இப்போது அடுத்த plan ஆக ஒரு துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு அதை வெளியில் தள்ளி விடலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் அந்த பல்லி என்ன நினைத்ததோ (எனக்கு அதிகம் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைதிருக்கலாம்)  குடு குடுவென்று பால்கனி பக்கம் ஓடியது.  எங்கள் வீடு இரண்டாவது மாடியில் இருந்தாலும் பல்லி மேலே இருந்து கீழே விழுந்தாலும் அதற்கு ஒன்றும் ஆகாது என்று என்று என் அறிவுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அதை அங்கிருந்து தள்ளி விட்டு எட்டிப் பார்த்தேன்.  கீழே இருந்த மணலில் விழுந்த பல்லி எந்த சேதாரமும் இல்லாமல் ஓடியதைப் பார்த்து திருப்தியுடன் வீட்டுக்குள் வந்தேன்.

இந்த பதிவு பல்லியை விரட்டிய என் பராக்கிரமத்தை பறை சாற்றுவதற்காக அல்ல. பல்லி ஒரு சாதுவான அப்பிராணி.  அதை விரட்டுவதற்கு எந்த மெனக்கெடலும் தேவை இல்லை.

பின் எதற்கு இந்தப் பதிவு ?  பல்லியை துரத்திய பிறகு அது குறித்த சில விவரங்களை கூகுளில் தேடினேன்.  சில முக்கியமான விஷயங்கள் தெரிய வந்தது. அதில் சில :

முதலில் பல்லிக்கு பற்கள் கிடையாது.  அதனால் பல்லி நம்மை கடித்து விடுமோ என்ற பயம் தேவை இல்லை.

பல்லியின் உணவு பொதுவாக கரப்பான், கொசு, ஈ போன்ற insects தான். பல்லி ஒரு நாளில் சில நூறு insects ஐ தன்னுடைய உணவாக கபளீகரம் செய்துவிடும்.  பல்லி என்ற ஒரு ஜந்து (ஐந்து என்று படித்து விடவேண்டாம்) இல்லாவிட்டால் நம்முடைய வருமானத்தின் பெரும் பகுதியை Hit வாங்குவதற்கே செலவு செய்ய வேண்டி இருக்கும்.

இப்படி காசு செலவில்லாமல் நமது ஆரோக்கியத்தை காப்பாற்றுவது பல்லிகள்தான்.  

இதுவும் தவிர இந்து நம்பிக்கையில் பல்லி வீட்டில் இருந்தால் அதை ஒரு good vibration என்றுதான் சொல்கிறார்கள்.  

ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.  பல்லி வீட்டில் இருப்பது நம் யாருக்கும் எந்தக் கெடுதலும் இல்லை (சில சமயங்களில் அதற்குத் தான் கெடுதல்).  நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு செயல் உணவு பண்டங்களை ஒழுங்காக மூடி வைக்க வேண்டியதுதான்.

நான் பல்லிக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். 

கண்ணதான் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது "பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா ?  யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்   எல்லாம் சௌக்கியமே. கருடன் சொன்னது" (அப்பாடா இன்று  கண்ணதாசனின் நினைவு நாள். அவரையும் நினைத்தாகி விட்டது)

ஆண்டவன் படைப்பில் எதுவுமே தேவை இல்லாத ஒன்றல்ல.  யாரும் (அல்லது எதுவும்) இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.


Saturday, September 19, 2015

குறையொன்றுமில்லை .......


kurai ondrum illai song download க்கான வீடியோ

திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் நூற்றாண்டு விழா 16/09/2015 முதல் 16/09/2016 வரை கொண்டாடப்படுகின்றது என்று தினமணி செய்தி வாயிலாக அறிந்தேன்.

MSS என்று சுருக்கமாகவும் அன்பாகவும் அழைக்கப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி அவர்கள் பெற்ற பரிசுகளும் விருதுகளும் மீண்டும் எந்தப் பெண்ணாலும் பெற முடியுமா என்பது சந்தேகமே. பத்மபூஷன் விருது ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே அதைப் பெற்றவர்.  இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா முதல் ஆசியாவின் நோபெல் பரிசு எனப்படும் ரமோன் மக்சேசே விருது வரை பல விருதுகளை வாங்கியவர்.

இதெற்கெல்லாம் மேலாக கடவுளையும் நம்மையும் எழுப்பும் ஸுப்ரபாதம் பாடி நம்மிடம் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.  ஆனால் அவர் பாடிய குறையொன்றுமில்லை என்ற பாடலை அறியாதவர் யாரும் இருக்க முடியாது.

பேரும் புகழும் இருந்தாலும் பேர் சொல்ல ஒரு குழந்தை இல்லையே என்று அவர் முடங்கிப் போயிருக்கலாம்.  ஆனால்  குறையொன்றுமில்லை என்று ஊரெல்லாம் சென்று பாடி பலருடைய மனக் குறைகளைத் தீர்த்தவர்.

நம்மில் யாருக்குதான் குறை இல்லை. சொல்ல ஆரம்பித்தால் நாம் ஒவ்வொருவரும் பக்கம் பக்கமாக குறைகளை அடுக்கலாம்.  ஆனால் நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கண்ணதாசன் வரிகளை நினைத்துப் பார்த்தால் நம்முடைய குறைகள் ஒன்றுமில்லை என்று ஆகிவிடும்.


நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது மகாகவி பாரதியைத்தான்.   தாயின் அரவணைப்பு மிகவும் தேவைப் படும் ஐந்து வயதில் தாயை இழந்தவன்.   தந்தையின் அரவணைப்பு மிகவும் அவசியமான பதினாறு வயதில் தந்தையை இழந்தவன்.  வாழ்க்கை முழுவதும் வறுமை துரத்தியது. சுதந்திர போராட்டத்தின் அடக்கு முறையால் நாடு விட்டு நாடு சென்று திரைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவன்.


அப்படிபட்டவன் சொல்கிறான்.  "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" என்றும் "தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்றும்.

ஆனால் நாம்தான் கண் எதிரில் இருக்கும் இன்பத்தை எல்லாம்  மறந்துவிட்டு கற்பனையான துன்பத்தினை துரத்திக் கொண்டிருக்கிறோம்.

துன்பப் பறவைகள் நம் தலைக்கு மேல் வட்டமடிப்பதை நம்மால் தவிர்க்க முடியாது.  ஆனால் கண்டிப்பாக அவை நம் தலை மேல் கூடு கட்டுவதை தவிர்க்க முடியும் என்ற ஒரு பழமொழி உள்ளது. 

எப்போதாவது நம் தலைக்கு மேல் துன்பப் பறவைகள் வட்டமடிப்பதாகத் தோன்றினால் MSS அம்மாவின் குறையோன்றுமில்லை பாடலைக் கேட்கலாம் அல்லது பாரதியின் கவிதைகளை படிக்கலாம்.  துன்பப் பறவைகள் தெறித்து ஓடி விடும். 

மூதறிஞர் ராஜாஜி எழுதி MSS பாடிய இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். நம்பிக்கை இருந்தால் நிம்மதி கிடைக்கும்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாகுறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா.


Friday, August 28, 2015

தவமின்றி கிடைத்த வரமே


Advocate  தொழிலில் இருப்பதால் இப்போதெல்லாம் நிறைய விவாகரத்து case- களும் வருகின்றன.  நாய் விற்ற காசு குரைக்காது என்று தெரியும். இருந்தாலும் பிரித்து வைத்து சம்பாதிக்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்  விவாகரத்து வழக்குகளை நடத்துவதில்லை என்று ஒரு பொதுவான விதியை வைத்து இருக்கிறோம். 

மிகவும் அரிதாக ஒன்றிரண்டு வழக்குகளைத்  தவிர விவாகரத்துக்கான காரணங்கள் பெரும்பாலும் மிகவும் silly ஆக இருக்கின்றன. இந்தக் காரணங்களுக்கெல்லாம்   விவாகரத்து செய்து இருந்தால் நம்முடைய பெற்றோரோ அல்லது ஏன் நாமோ கூட (I mean கல்யாணம் செய்து சண்டையும் சமாதானமுமாக இருக்கும் பெரும்பான்மையான தம்பதியர்) குறைந்தது சில நூறு தடவையாவது விவாகரத்து செய்து கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும்.

விவாகரத்துக்கு  வரும்  சில  தம்பதியர் குறைந்தது 6 அல்லது 7 வருடங்கள் காதலித்து கரம் பிடித்தவர்கள் (காதலித்து இருக்கும் போதும் பிடித்து (??) இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை) .  "என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" என்று ஆணும், "தவமின்றி கிடைத்த வரமே, இனி  வாழ்வில் எல்லாம் சுகமே" என்று பெண்ணும்  உருகி உருகி காதலித்தவர்கள்தான்.  ஆனால் கல்யாணம் ஆகி சில வருடங்களில் (அல்லது சில மாதங்களில்)  court படி ஏற வேண்டிய நிலை என்ன என்று யோசித்தால் சில விசயங்கள் புரிகிறது.

ஆங்கிலத்தில் juxtaposition என்று ஒரு வார்த்தை உள்ளது. இதன் ஆங்கிலப் பொருள் "place something closely alongside something else".  சுருக்கமாக சொல்வதென்றால் இரு துருவங்கள் இணையும் இடம் என்று பொருள் கொள்ளலாம்.  நாம் இப்போது கிட்டத் தட்ட அந்த காலக் கட்டத்தில் இருக்கிறோம்.

அதாவது "அடங்க மறு அத்து மீறு" என்று தொல் திருமா பாணியில் பெண்ணும், அதே கோஷத்துடன் ஆணும் புறப்பட்டு இருப்பதுதான் (விந்தையாக இருந்தாலும் அதுதான் உண்மை - atleast நடுத்தர வர்க்கங்களில்  அல்லது அதற்கும் மேலே).

ஆணும் பெண்ணும் சமமாக வளர்க்கப்படும் இந்த நாட்களில் இருவருக்குள்ளும் ego சரிசதவிகிதமாக இருக்கிறது. அடிப்படையில் ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் இருக்கிறோம். ஆண் Hello FM என்றால் பெண் Big FM   (Hello அது என்ன ஆண் என்றால் Hello பெண் என்றால் Big என்று சண்டைக்கு வந்து விடாதீர்கள் - ஒரு எதுகை மோனைக்காக போட்டது. வேண்டுமானால் மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள்). அதனால் இரண்டும் ஒரே அலைவரிசையில் இருக்க முடியாது.  அவரவர் நிலையில் இருந்துதான் ஒரே விஷயத்தை இருவரும் அணுகுவார்கள். அதனால் கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாதது.  அதே சமயத்தில் ஆணோ பெண்ணோ மற்றவரை சார்ந்து இருக்கும் சமயங்களில் அடங்கி இருப்பார்கள் (அல்லது அடங்கி இருப்பது போல இருப்பார்கள்).  இல்லாவிட்டால் அடங்க மறு அத்து மீறுதான்.


இதற்குதான் நம் முன்னோர்கள் "அர்த்தநாரி" தத்துவத்தை சொன்னார்கள். அதாவது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். அதே போல ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள் என்று.   இதன் முக்கிய பொருள் எந்த ஒரு விஷயத்திலும் ஆண் இந்த விஷயத்தை எந்தக் கோணத்தில் அணுகுவான் என்று பெண்ணும் அதே போல பெண் இந்த விஷயத்தை எந்தக் கோணத்தில் அணுகுவாள் என்று ஆணும் சிந்திப்பதுதான்.  இப்படிச் செய்தாலே பல தகராறுகளை தவிர்த்து விட முடியும்.

ஆனால் இதற்குத் தேவை கொஞ்சம் சிந்திக்கும் திறனும், ஈகோவை மிஞ்சின கொஞ்சம் extra அன்பும்தான்.

அப்படி இருந்தால் சண்டையே வராதா என்று கேட்காதீர்கள்.  அப்பவும் நிறைய வரும்.  ஆனால் முதல் நாள் போட்ட சண்டையை மறந்து விட்டு மறுநாள் ஆனந்தமாக சிரித்துக் கொண்டு இருப்போம் - சிரிப்பின் முடிவில் மற்றொரு சண்டை ஆரம்பிக்கக்கூடும் என்று தெரியாமல்.

சண்டையே வேண்டாம் என்று நினைத்தால் சரணாகதி தத்துவம்தான் ஒரே வழி.   நான் ஏன் சரணாகதி அடைய வேண்டும் என்று இருவரும் நினைத்தால் அதற்கு இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம்.  அது வரை சந்தோஷமாக சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.



Sunday, August 16, 2015

நல்லாயிரு



சமீபத்தில்  படித்த ஒரு கதை.  நீங்களும் கேள்விப்பட்டு இருக்கலாம்.  இருந்தாலும் நல்ல விஷயங்களை மீண்டும் படிப்பதில் தவறில்லை என்பதால் இந்தப் பதிவு.

ஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான்.  எல்லோரையும் எப்போதும் வம்புக்கு இழுத்துக் கொண்டே இருப்பான். அதனால் அவனிடம் நெருங்குவதற்கே எல்லோரும் பயப்பட்டார்கள்.  ஆரம்பத்தில்  அவனுக்கு இதில் ஒருவித பெருமிதம் இருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல தன் மீதே அவனுக்கு ஒரு கோபம் தோன்றியது.  தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.   ஆனால் எப்படி என்று தெரியவில்லை. 

அந்த சமயத்தில் அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார். அவரிடம் சென்று அந்த முரடன் தானும் ஒரு சாதாரண ஒரு மனிதனாக எல்லோரையும் போல் வாழ வேண்டும் என்று ஆசைப் பாடுவதாகவும் அதற்கு அந்த ஞானி உதவ வேண்டும் என்றும் வேண்டினான். 

அந்த ஞானி சிரித்துக் கொண்டேஅவனிடம் இனி யாரைப் பார்த்தாலும் "நல்லாயிரு" என்று சொல்லிக் கொண்டே இரு. வேறு எதுவும் அவர்களிடம் பேசாதே என்று சொல்லி சென்று விட்டார்.

முரடனுக்கு இப்போது ஒரே குழப்பம் மற்றும் சந்தேகம்.  எப்படி நல்லாயிரு என்ற ஒரு வார்த்தை தன்னுடைய வாழ்க்கையை மாற்றிவிடும் என்று. இருந்தாலும் சொன்னது ஞானி ஆயிற்றே.  அதனால் முயற்சி செய்து பார்த்து விடுவோம் என்று முடிவு செய்தான். 

அன்றிலிருந்து அவன் யாரைப் பார்த்தாலும் நல்லாயிரு என்ற வார்த்தையை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.  அவனை இதுவரை முரடனாக பார்த்தவர்கள் எல்லாம் இப்போது அவனை வியப்புடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.  அவனைத் தெரியாத பக்கத்துக்கு ஊர்க்காரர்கள் அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்ப ஆரம்பித்தார்கள்.  

ஊர்க்காரர்கள் சிலருக்கு அவன் நல்லாயிரு என்று சொன்ன ராசி சில நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பித்ததும் அவனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.  

இப்போது அந்த முரடன் யோசிக்க ஆரம்பித்தான்.  ஒரே ஒரு நல்ல வார்த்தை சொன்னதற்கே இவ்வளவு நல்லது நடக்க ஆரம்பித்தால் நம் வாழ்க்கை முழுவதும் நல்ல வார்த்தைகளை பேசினால் எப்படி இருக்கும் என்று.  

முன்பு சந்தித்த ஞானி இப்போது மறுபடியும் அந்த முரடன் இருந்த ஊருக்கு வந்தார்.  முரடன் அந்த ஞானியை வணங்கி தன்னுடைய வாழ்கை மாற்றத்தினை சொன்னான்.  

ஞானி சிரித்துக் கொண்டே சொன்னார் "நல்லாயிரு" என்று.


சமீபத்தில் படித்த இன்னொரு விஷயம்.

நம் ஊரில் திருக்குறள் முனுசாமி என்ற ஒரு பிரபல பேச்சாளர் இருந்தார்.  திருக்குறளை நாடு முழுவதும் கொண்டு சென்ற முன்னோடி இவர்.  திருக்குறளார் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் இவர்.

ஒரு முறை அவரிடம் ஒருவர் தன்னுடைய பிள்ளைகள் தன் பேச்சை கேட்பதில்லை என்று ஆதங்கப் பட்டார்.

அதற்கு திருக்குறளார் சொன்ன பதில் classic.

அவர் சொன்னார்.  நாம் பிறந்ததில் இருந்து நம் கூடவே இருக்கும் நம் கை கால்களே ஒரு காலத்தில் நம் பேச்சைக் கேட்பதில்லை.  அப்படி இருக்கும் போது நம் வாழ்வின் பாதியில் வந்த பிள்ளைகளோ மற்ற உறவுகளோ நம் பேச்சைக் கேட்பார்கள் என்று நினைப்பது எப்படி சரியாக இருக்க முடியும் என்று.

அப்போதுதான் யோசித்தேன். 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்து  நாம்  வைத்த அலாரத்தை நாமே கேட்பதில்லை.  பிறகு நம் பேச்சை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமானது.


அனந்தராமன் சார்

திருவல்லிக்கேணி அருணாச்சலம் தெரு எண் 36-இல் இருக்கும்  குடியிருப்பு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்.  இந்தக் குடியிருப்பின் மாடியில் உள்ள வீட்டில்தான் அனந்தராமன் சார்  வசித்து வந்தார்.  வீட்டின் வாசலில் K S .Anantharaman, Advocate & Professor என்ற ஒரு board மட்டும் இருக்கும். ஆனாலும் இந்த விலாசம் ஊர் அறிந்த ஒன்று.

அந்த வீட்டின் ஹாலில் அதிக பட்சம் 15 பேர் அமர முடியும்.  ஆனால் இந்த ஹால் அனந்தராமன் சார் மூலமாக பல நூற்றுக்கணக்கான கம்பெனி செக்ரெட்டரிகளையும் (Company Secretaries) Aravind Dattar  உள்ளிட்ட பல வழக்கறிஞர்களையும் (Advocates) உருவாக்கியுள்ளது.

அவர் தன்னுடைய 87 வது வயதிலும் கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் கொண்டு இருந்ததால்  அவருக்கு 60 வயது முதல் 20 வயது வரை எல்லா வயதிலும் மாணவர்கள் உண்டு.   அவர்களில் பெரிய வழக்கறிஞர்களாகவும், அல்லது உயர்ந்த பதவிகளிலும் இருப்பவர் பலர்.   ஆனால் எவரிடமும் பர்சனல் ஆக எந்த உதவிக்கும் செல்லாதவர்.  

சில ஆண்டுகளுக்கு முன் நான்  நண்பர்கள் Prakash மற்றும் Sandeep உடன் சென்று அவரை சந்தித்து ஒரு shirt பரிசாக  அளித்து ஆசி பெற்று வந்தோம்.  அந்த shirt ஐ கொடுப்பதற்கே, ஏதாவது சொல்லி விடுவாரோ என்று கொஞ்சம் பயந்தோம்.  நல்ல வேளை எதுவும் சொல்லாமல் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

நானும் அவரிடம் Company Law கற்றுக் கொள்வதற்காக ஒரு மாணவனாக சேர்ந்தவன்தான். ஆனால் விரைவில் Teacher - Student என்ற நிலையில் இருந்து குரு சிஷ்யன் என்ற நிலைக்கு வந்தது. என்னைப் போலவோ அல்லது என்னை விட அதிக நெருக்கமாகவோ அவருக்கு பல சிஷ்யர்கள் உண்டு.  என்னைப் பொறுத்தவரை நான் அவரை மிகவும் நெருக்கமாக நினைத்தற்கு சில காரணங்கள் உண்டு.

நான் Company Secretaryship Course சேர்ந்த போது வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.  அதனால்  வேலை பளுவின் நடுவில் exam-ஐ சுலபமாக பாஸ் செய்வது எப்படி என்ற கோணத்தின் அடிப்படையில்தான் அவரிடம் சேர்ந்தேன்.   ஆனால் அவர் law subject எடுத்த விதம் என்னை  வெறும் மார்க்குக்காக படிக்காமல் subject-ஐ ஆழமாக படிக்கும் ஆர்வத்தினை உண்டாக்கியது.

அனந்தராமன் சார் மிகவும் கோபக்காரர்.  அவர் வீட்டில் வரிசையாக போட்டிருக்கும் chair-களை நம் இஷ்டத்திற்கு மாற்றினாலோ அல்லது உட்காரும் போதும் எழுந்திருக்கும் போதும் chair-களை நகர்த்தி சத்தம் உண்டாக்கினாலோ tension ஆகி விடுவார்.   கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப உடனே கோபம் தணிந்து cool ஆகி விடுவார்.

அவரின் கோபத்திற்கு இடையில் புகுந்து தப்பித்து அவரின் அன்பை மட்டும் பெற்ற பாக்கியவான்களில் நானும் ஒருவன்.

ஸ்ரீனிவாசன் உங்களுக்கு law subject நன்றாக வருகிறது.   Advocate தொழிலில்  உங்களால் நன்றாக shine ஆக முடியும் என்று சார் சொன்னதும் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி  பட்டம் வாங்கிய மகிழ்ச்சி எனக்கு.

அவருடைய Lectures on Company Law புத்தகத்தின் 7 வது பதிப்பின் போது என்னை பிழை திருத்தம் (proof reading)  செய்யச் சொன்னார். எனக்கு company law-வை ஓரளவு முழுமையாக அறிந்து கொள்ளும் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அது அமைந்தது.

அந்தப் பதிப்பில் என்னுடைய பெயரை போட்டு எனக்கு நன்றி கூறியதை highlight செய்து ஊருக்கெல்லாம் காட்டிக் கொண்டிருந்தேன்.  அது அவ்வளவு பெருமையான விஷயமாக இருந்தது.

அந்தப் பதிப்பின் ஒரு புத்தகத்தில் "With Blessings"  என்று தன் கைப்பட எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தாலும் கடந்த ஓராண்டாக அவரை சந்திக்கவில்லை.  அதற்கு ஒரு முக்கியமான காரணம் நான் "Professional Guide on Drafting, Appearances and Pleadings" என்ற தலைப்பில் ஒரு சிறிய புத்தகம் எழுதி இருந்தேன்.  அதை அவரிடம் காட்டி அவரின் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  ஏனென்றால் இந்தப் புத்தகம் எழுதுவதற்கான நம்பிக்கையையும்  அறிவையும் ஊட்டியது அவர்தான்.  ஆனாலும் அந்தப் புத்தகத்தை அவரிடம் நேரில் காட்டுவதற்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு உதறல்.  அதனால் அதை தள்ளி வைத்துக் கொண்டே இருந்தேன்.  வாழ்கையில் சில விஷயங்களை நினைத்தபோது செய்து விட வேண்டும்.   ஏனென்றால் மீண்டும் செய்வதற்கு அது வாய்க்காமல் போய் விடக் கூடும்.

அதனால் என்ன சார், உங்கள் "Blessings" இன்றும் என்னுடன் உள்ளது.  எப்போதும் அது என்னுடன் இருக்கும்.


Monday, July 27, 2015

அணைந்து விடாத அக்னிச் சிறகுகள்


நாம் வாழ்நாளில் ஒரு முறை கூட நேரில் பார்க்காத ஒரு மனிதரின் மரணம் நம்  இதயத்தில் ஒரு வலியை உருவாக்கி, நம்  கண்களில் ஒரு சொட்டு கண்ணீரையாவது வரவழைத்தால் அந்த ஆத்மாவிற்கு பெயர்தான் மகாத்மா. 

இந்தியாவின் ஒரு கோடியில் பிறந்து மறு கோடியில் இறந்தாலும், ஒவ்வொரு இந்தியரும் தனக்கு நெருக்கமானவர் இவர்  என்று நினைக்க வைத்தால் அவர் சாதாரண மனிதராக இருக்க முடியாது. ஒரு மகானாகத் தான் இருக்க முடியும்.

தூக்கத்தில் வருவது அல்ல கனவு.  உன்னை தூங்கவிடாமல் இருக்க வைப்பதுதான் கனவு என்று கனவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கிய மாமேதை கலாம் தன்னுடைய அக்னிச் சிறகுகளை விரித்து விண்ணோக்கிப் பறந்து விட்டார்.

நான் என்னுடைய வாழ்வின் இறுதியில்  குழந்தைகளுடன் நடுவில் இருக்க (இறக்க)  விரும்புகிறேன் என்ற தன்னுடைய கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நம் நன்றிகள்.

இப்படி ஓயாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறீர்களே - எப்போது ஓய்வு எடுப்பீர்கள் ? என்ற கேள்விக்கு கலாம் அளித்த பதில் "ஓய்வு என்பது என்ன. நமக்குப் பிடித்த வேலையை மகிழ்ச்சியாக செய்து கொண்டு இருப்பதுதான். அதனால் நான் எப்போதும் ஓய்வாகத் தான் இருக்கிறேன்".  மரணத்தின் கடைசி நொடி வரை உழைத்த மனிதனுக்கு இனி நிரந்தரமான ஓய்வு.

ஒருமுறை கலாமிடம் சிறந்த தலைவனுக்கான அடிப்படைத் தகுதிகள் (good leadership qualities)  என்ன என்று கேட்டபோது அவர் பட்டியலிட்ட ஆறு அடிப்படைத் தகுதிகள்:

1. உயரிய நோக்கம் ( Great Vision) 
2. புதிய பாதையில் பயனித்தல் (Able to travel the untravelled path)
3. தோல்விகளை எதிர்கொள்ளும் திறமை (Able  to manage failures)
4. முடிவெடுக்கும்  துணிவு (Courage to take decision)
5. நேர்மையான செயல் மூலமான வெற்றி (Work with integrity and succeed with it)
6. மனிதர்களுடன் பழகும் திறன் (Able  to mix with people)  

ஆறு அடிப்படைத் தகுதிகள் மட்டுமல்லாது, பல நூறு தகுதிகள் பெற்ற கலாம் உங்களுக்கு ஒவ்வொரு இந்தியனின் சார்பிலும் ஒரு சலாம். 

 
கலாமின் அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தில் இருந்து சில வைர வரிகள்.

ஒருவர் தன் வாழ்நாளில் தனக்குரிய இடத்தில் என்ன நிலையில் இருக்கிறாரோ, நல்லதோ கெட்டதோ எந்த நிலையை அவர் எட்டி இருந்தாலும் அது தெய்வ சங்கல்பம்.

உங்களுடைய குழந்தைகள் எல்லாம் உங்களுடைய குழந்தைகள்  அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக வந்தவர்கள்.  அவர்களிடம் நீங்கள் உங்கள் அன்பை வழங்கலாம். ஆனால் உங்களுடைய சிந்தனைகளை அல்ல. தங்களுக்கு என்ற  சிந்தனை கொண்டவர்கள் அவர்கள்.

நம்பிக்கை வைத்தால் உன் தலைவிதியை உன்னால் மாற்றி அமைக்க முடியும்.

எந்த சிக்கலான சூழ்நிலையிலும் பலனைப் பற்றி யோசிக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இரு.  ஏனென்றால் சிக்கலான எல்லா விஷயங்களிலுமே இழப்பு என்பது தவிர்க்க முடியாது.

மற்றவர்களை அறிந்தவன் பண்டிதன். தன்னை அறிந்தவன்தான் உண்மையான கல்விமான்.  விவேகம் தராத கல்வி பயனற்றது.

எதிர்கால வாய்ப்புகள் பற்றி யாரும் கவலைப்படவே கூடாது.  மாறாக வலுவான அடித்தளம் அமைப்பது அது பற்றிய ஆர்வம், தேர்வு செய்துள்ள துறையில் தீவிரமான நாட்டத்தை வளர்த்துக் கொள்வது என்பதுதான் மிகவும் முக்கியம்.

கடவுள் உங்களுடைய நம்பிக்கையாகவும், ஜீவனாகவும் , வழிகாட்டியாகவும் இருந்து உங்களுடைய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் ஒளி  வழங்கட்டும்.

எனக்கான வாய்ப்புக்களை நானேதான்  உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சர்வ சக்தி கொண்ட எல்லைகள்தான் உன்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.  எவ்வளவு அதிக சுமையையும் உன்னால் மட்டுமே தூக்க முடியும்.  எவ்வளவு வேகமாகவும் உன்னால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும்.  எவ்வளவு கடுமையாகவும் உன்னால் மட்டுமே பாடுபட முடியும். எவ்வளவு தொலைவாக இருந்தாலும் உன்னால் மட்டுமே பயணப்பட முடியும்.  

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

சந்தேகத்தை அறவே விடுத்து அலட்டிக் கொள்ளாமல் இருக்கும்போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்.

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொண்டு சமாளியுங்கள்.

வாட்டி வதைத்தாலும் கடுமையாகப் பாடுபட்டால்தான் பிரச்சனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு  காணமுடியும்.

பிரச்சனைகள்தான் உள்ளார்ந்த துணிச்சலையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.

நான் என்றுமே தெய்வ நம்பிக்கை கொண்டவன்.  எனது பணியில் இறைவனையும்  பங்குதாரராக சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.  அபாரமான வேலைக்கு எனக்கிருக்கும் திறமையை விட  அதிகம் தேவை என்பதை அறிந்திருந்தேன்.  எனவே கடவுளால் மட்டுமே தரக் கூடிய உதவியை நாடினேன்.

உனது எல்லா நாள்களிலும் தயாராக இரு 
எவரையும் சம உணர்வோடு சந்தி 
நீ பட்டறைக் கல்லானால் அடிதாங்கு 
நீ சுத்தியானால் அடி.

உனது பயணத்தில் நடை போடுவதற்கு இறைவன் உனக்கு ஒளி  காட்டுவான்.

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

உங்கள் முன்னே  நடமாடித் திரிவதற்காக எந்த  தேவ தூதரையும் நாங்கள் அனுப்பவில்லை. ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக நடந்து கொள்வதை வைத்துதான் உங்களை சோதிக்கிறோம். அதற்குக் கூட உங்களிடம் பொறுமை இல்லையா ?

கவலைப் படாதே, முணுமுணுக்காதே 
மனம் தளராதே, இப்போதுதான் 
வாய்ப்புக்கள் வர ஆரம்பித்துள்ளன 
சிறந்த  பணி  இன்னும் ஆரம்பமாகவில்லை 
சிறந்த பணி இன்னும்  முடிக்கப் படவில்லை.

காலத்தின் மணல் பரப்பில் 
உன் காலடிச் சுவடுகளைப் 
பதிக்க விரும்பினால் 
உனது கால்களை 
இழுத்து இழுத்து நடக்காதே.

உங்களுடைய  கல்வியையும் திறமையையும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அறிவாற்றல்தான் நிதர்சனமான நிலையான சொத்து என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

வெற்றி அடைந்த எல்லோரிடமும் காணப்படும் பொதுவான அம்சம் முழுமையான பொறுப்புணர்வு. 

வெற்றிகளால் மட்டுமே நாம் உயர்ந்துவிட முடியாது. தோல்விகளாலும் நாம் முன்னேறுவோம் என்பதை எப்போதுமே  மறந்துவிடக் கூடாது.

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு எதிர்காலத்திற்காக மட்டும் வாழ்வது சாரமற்ற முழுமை அடையாத ஒரு வாழ்க்கை.  சிகரத்தை எட்டுவதற்காக மலையின் பல்வேறு பகுதிகளை அனுபவிக்காமல் மலை ஏறுவதைப் போன்றது அந்த வாழ்க்கை.  இந்தப் பகுதிகளில்தான் மலையின் ஜீவன் இருக்கிறது.  சிகரத்தில் அல்ல.

மற்றவர்களின் சிந்தனையில் விளைந்த ஆதாயங்களைப் பயன்படுத்திக் கொண்டு நான் என்றுமே வாழ்ந்தது இல்லை. எனது வாழ்க்கையை நிர்ணயம் செய்திருப்பது   எனது இயல்புதான்.

யாருக்கு பெருமை போய்ச் சேரும் என்பதைப் பொருட்படுத்தாமல் செயல் ஆற்றுபவர்கள் மூலம்தான் மகத்தான காரியங்களை இறைவனால் நிறைவேற்ற முடியும்.

அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆழமான ஈடுபாடு கொள்ளுங்கள். உடனே கிடைக்கும் செயற்கையான சந்தோஷத்தைத் துரத்தி அலையாதீர்கள்.